மநீம தேர்தல் அறிக்கை மார்ச் 31-இல் வெளியீடு: கமல்ஹாசன் பங்கேற்பு

புதுவை மாநிலத்துக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை வரும் 31-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிடவுள்ளார்.


புதுவை மாநிலத்துக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை வரும் 31-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிடவுள்ளார்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் மருத்துவர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
புதுவை யூனியன் பிரதேசமாக உள்ளது. இதன் காரணமாக, புதுவை மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள் ஆட்சிக்கு வந்தாலும், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநரே அரசை நிர்வகித்து வருகிறார். இந்த நிலை மாற வேண்டும் என்றால், புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும். அப்போதுதான், இங்கு மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள் ஆட்சி செய்ய முடியும்.
அதேபோல, மத்திய அரசின் கணக்கில் இருந்து புதுவையைப் பிரித்து தனி கணக்கு தொடங்கியபோதே அதுவரை மத்திய அரசு வழங்கியிருந்த கடன் முழுவதையும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அதையும் செய்யாததால் புதுவையின் வருமானத்தில் பெரும்பகுதியை கடனை அடைக்கவே செலவிட வேண்டி உள்ளது.
மேலும், மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாயை பிரித்து கொடுக்கும் மத்திய நிதி குழுவில் புதுவை சேர்க்கப்படவில்லை. இவை மூன்றும் புதுவையின் முக்கிய பிரச்னைகளாக இருந்து வருகின்றன. இதனை பிரதான கட்சிகள் அனைத்தும் அறிந்தும் உள்ளன. எனவேதான், அனைத்து தேர்தல்களின்போதும் இவைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதிகளாகவும் அளித்து வருகின்றன. 
 ஆனால், தேர்தலுக்குப்பின்னர் மக்களவையில் அந்தக் கோரிக்கைகளை மக்களால் தேர்வு செய்து அனுப்பப்படும் கட்சிகளின் உறுப்பினர்கள் பேசுவது கூட இல்லை.  இதனாலேயே இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததுடன், புதுவையின் வளர்ச்சி பின்தங்கியும் உள்ளது.
எனவே, நடைபெறவுள்ள மக்கவைத் தேர்தலுக்குப் பின்னர் புதுச்சேரியின் கோரிக்கைகளை மக்களவையில் பேசுபவரை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.  மக்கள் நீதி மய்யம் வேட்பாளராகிய என்னை மக்கள் தேர்வு செய்தால், நிச்சயம் இந்த மூன்று கோரிக்கைகளையும் முதல் மக்களவை கூட்டத்தொடரிலேயே வலியுறுத்துவேன்.
என்னுடைய தொகுதி வாரியான பிரசாரப் பயணம் வரும் 27-ஆம் தேதி காலாப்பட்டில் தொடங்குகிறது. வரும் 31-ஆம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலை திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். புதுவைக்கான தனி தேர்தல் அறிக்கையை அந்தக் கூட்டத்திலேயே கமல்ஹாசன் அறிவிக்கிறார் என்றார் அவர். பேட்டியின்போது, கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com