Enable Javscript for better performance
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 11 பேர் வேட்புமனு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி வரை 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
     சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றதால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் ஆனந்த் தனது எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். இதையடுத்து, தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
     அதன்படி, புதுச்சேரி மக்களவைத் தொகுதி, தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சனி, ஞாயிறு விடுமுறை நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
     தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.ஸ்மித்ராவிடம் திமுக வேட்பாளர் கே.வெங்கடேசன், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பி.நெடுஞ்செழியன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பி.கெளரி உள்பட 5 பேர் திங்கள்கிழமை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
     இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான செவ்வாய்க்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த ஸ்ரீதர், புதுச்சேரி வளர்ச்சி கட்சியை சேர்ந்த கே.ரவிசங்கர், சுயேச்சைகளாக கா.தமிழமல்லன், எம்.முருகசாமி (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்), பி.வேல்முருகன், இ.மன்னாதன் ஆகிய 6 பேர் தேர்தல் அலுவலர் ஆர்.ஸ்மித்ராவிடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
     செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி வரை மொத்தம் 11 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பாளர் பரிசீலனை புதன்கிழமை நடைபெறவுள்ளது. அப்போது தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாத வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai