Enable Javscript for better performance
புதுவை பல்கலை. மாணவர்கள் 2-ஆவது நாளாக போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுவை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     புதுச்சேரி காலாப்பட்டில் புதுவை மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 6,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
     இந்த நிலையில் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த 22-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
     இதில் நிகழாண்டில் ஒரு சில படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் 25 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்தும், புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரியும், பல்கலைக்கழக நுழைவாயில் முன், புதுச்சேரி மாணவர் பேரவை, இந்திய மாணவர் சங்கம், மாணவர் காங்கிரஸ், அம்பேத்கர் மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை, அம்பேத்கர் பெரியார் மாணவர் கழகம் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     தொடர்ந்து, 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள், உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேரணியாகச் சென்று துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     தொடர்ந்து உள்ளேச் செல்ல முயன்ற அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து துணைவேந்தர் அலுவலக வாயிலில் அமர்ந்த மாணவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
     தொடர்ந்து, மாலையில் மாணவப் பிரதிநிதிகளுடன் துணைவேந்தர் (பொ) பேராசிரியர் பாலகிருஷ்ணன், பதிவாளர் சித்ரா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாணவர்களை பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai