Enable Javscript for better performance
ரூ.2,300 கோடியில் கிழக்குக் கடற்கரை ரயில் திட்டம் விரைவில் தொடக்கம்: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உற- Dinamani

சுடச்சுட

    

    ரூ.2,300 கோடியில் கிழக்குக் கடற்கரை ரயில் திட்டம் விரைவில் தொடக்கம்: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதி

    By  புதுச்சேரி,  |   Published on : 27th March 2019 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிழக்குக் கடற்கரை ரயில் பாதைத் திட்டம் ரூ.2,300 கோடியில் விரைவில் தொடங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உறுதியளித்தார்.
     புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமியை அறிமுகப்படுத்தி அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதாவது:
     புதுவையில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. ஏழைகளுக்கு இலவச அரிசியைக்கூட தரவில்லை.
     மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. மூடப்பட்ட ஆலைகளையும் திறக்கவில்லை. வாக்குறுதிப்படி புதுவைக்கென ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்காவைக்கூட அமைக்கவில்லை.
     ஆயுஷ்மான் பாரத் திட்டம் புதுவையில் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
     இப்படிப்பட்ட நல்ல திட்டங்களை மத்திய அரசு கொடுத்திருந்தாலும், அவற்றை புதுவை அரசு செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது.
     பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.1850 கோடி, ஜிப்மர் மருத்துவமனை மேம்பாட்டுப் பணி, புதிய கட்டடங்களுக்கு ரூ.400 கோடி, பொலிவுறு கிராமத் திட்டத்தின் கீழ் பாகூர், திருநள்ளாறுக்கு ரூ.200 கோடி, குடிநீர்த் தேவைக்காக ரூ.500 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
     மேலும், மீனவர் மேம்பாட்டுக்காகவும், வருவாயைப் பெருக்கவும் பல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
     புதுவை மக்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த, சென்னையிலிருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு 179 கி.மீ தொலைவுக்கு ரூ.2,300 கோடியில் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு முடிவடைந்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார் பியூஸ் கோயல்.
     கூட்டத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
     பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், புதுவை மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி எம்எல்ஏ, என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ சுகுமாறன், அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் மற்றும் அதிமுக, பாமக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
     மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டு: காங்கிரஸ் மறுப்பு
     கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசியபோது, எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான சிபிஐ வழக்கில் சிக்கியவரைத் தான் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது என்று விமர்சித்தார்.
     இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கேட்டபோது, இது தொடர்பான வழக்கு ஏற்கெனவே தள்ளுபடி ஆகிவிட்டது. இது தவறான குற்றச்சாட்டு என்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai