Enable Javscript for better performance
சிறைக் கைதி மரணமடைந்த வழக்கு: வன்கொடுமை தடுப்பு காவல் பிரிவுக்கு மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சிறைக் கைதி மரணமடைந்த வழக்கு: வன்கொடுமை தடுப்பு காவல் பிரிவுக்கு மாற்றம்

    By DIN  |   Published on : 28th March 2019 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் சிறைக் கைதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடமிருந்து வன்கொடுமை தடுப்பு காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
     கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ். ஜெயமூர்த்தி (26). தொழிலாளி. கடந்த நவம்பர் 21-ஆம் தேதி பைக் திருட்டு வழக்கில் இவரை கைது செய்த பாகூர் போலீஸார், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
     அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி இறந்தார்.
     இதையறிந்த ஜெயமூர்த்தியின் உறவினர்களும், கரிக்கன் நகர் கிராம மக்களும், போலீஸார் தாக்கியதாலேயே ஜெயமூர்த்தி உயிரிழந்தார் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதுகுறித்து காலாப்பட்டு போலீஸார் சந்தேக மரணம் (174) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து, பாகூர் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் திருமால் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார், கொலை ஆகாத மரணம் (304) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன், சிறை கண்காணிப்பாளர் பாஸ்கர் மற்றும் சிறை மருத்துவர் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
     இந்த வழக்கில் ஜாதிய கொடுமையால்தான் கைதி ஜெயமூர்த்தி அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு காவல் பிரிவுக்கு (பிசிஆர்) மாற்றி டிஜிபி சுந்தரி நந்தா அண்மையில் உத்தரவிட்டார்.
     மேலும், விசாரணைக் கைதி மீதான வன்கொடுமை புகார் என்பதால் பிசிஆர் செல் பிரிவின் காவல் கண்காணிப்பாளரே விசாரணை அதிகாரியாக செயல்பட்டு விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடியிலிருந்து இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை வன்கொடுமை தடுப்புப் பிரிவுக்கு (பிசிஆர் செல்) மாற்றப்பட்டது. அதன் காவல் கண்காணிப்பாளர் வீர. பாலகிருஷ்ணன் வழக்கை விசாரித்து வருகிறார்.
     காலாப்பட்டு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தற்போது 3- ஆவது இடமாக பிசிஆர் செல்லுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai