Enable Javscript for better performance
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 18 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 18 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

    By DIN  |   Published on : 28th March 2019 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 37 வேட்பாளர்களில் 18 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 19 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
     புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது. செவ்வாய்க்கிழமை மாலையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி தி.அருணிடம், காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமி (எ) நித்யானந்தம் உள்பட 37 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
     இந்த நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரி அருண் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே. நாராயணசாமி ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
     மொத்தம் 18 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
     சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், மணக்குள விநாயகர் கல்விக் குழுமம் தொடர்பாக கே.நாராயணசாமியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் உரிய பதிலளித்த நிலையில் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. அதேபோல, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், பேரவைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த விளக்கத்தை ஏற்று அவரது மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி அருண் அறிவித்தார். மொத்தம் 19 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனு ஏற்பட்ட வேட்பாளர்கள் விவரம்: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் கே.நாராயணசாமி (என்.ஆர்.காங்கிரஸ்), ஏ.பாத்திமாராஜ் (பகுஜன் சமாஜ்), வெ.வைத்திலிங்கம் (காங்கிரஸ்), பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் கே.அருணாசலம் (அகில இந்திய மக்கள் கழகம்), எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் (மக்கள் நீதி மய்யம்), சு.திருஞானம் (ஊழல் ஒழிப்பு செயலாக்கக் கட்சி), எஸ்.பாஸ்கரன் (புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி), யு.முத்து (இந்திய சோசியலிஸ்ட் ஒற்றுமை மையம்), எஸ்.மோதிலால் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி), நி.ஷர்மிளா பேகம் (நாம் தமிழர் கட்சி), சுயேச்சைகள் கா.ராமதாஸ், எம்.கிருஷ்ணமூர்த்தி, சு.தங்கவேலு, நா.தமிழ்மாறன், திராவிட மங்கை (எ) லூர்துமேரி, எஸ்.பாலாஜி, டி.ரமேஷ், வி.ராமமூர்த்தி.
     இந்தப் பட்டியலில் இருக்கும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனில் மார்ச் 29-ஆம் தேதிக்குள் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
     மார்ச் 2-ஆம் தேதி இரவு புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai