மது கடத்த முயன்ற 2 பேர் கைது
By DIN | Published On : 29th March 2019 08:17 AM | Last Updated : 29th March 2019 08:17 AM | அ+அ அ- |

புதுவை மாநிலத்தில் இரு இடங்களில் மது கடத்த முயன்றதாக இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
புதுவை மாநிலம் மடுகரை எல்லை பகுதியில் நெட்டப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் விபுல்குமார் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியைச் சேர்ந்த குரு (25) என்பதும், புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து 75 குவாட்டர் மது பாட்டில்கள், 7 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 3,500 ஆகும்.
இதேபோல, புதுச்சேரி நேரு வீதி -அண்ணா சாலை சந்திப்பில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக பெரியக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீஸார், பையுடன் நடந்து சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (35) என்பதும், 48 மது பாட்டில்களை பையில் வைத்து விழுப்புரத்துக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார், அவரைக் கைது செய்ததுடன், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.