தோல்வி பயத்தால் மோடி மனம்போன போக்கில் பேசுகிறார்

தோல்வி பயத்தால் பிரதமர் மோடி மனம்போன போக்கில் பேசி வருவதாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

தோல்வி பயத்தால் பிரதமர் மோடி மனம்போன போக்கில் பேசி வருவதாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
 இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:
 பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஊழல் பேர்வழி என்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
 போபர்ஸ் விவகாரத்தை நாடாளுமன்ற நிலைக் குழு விசாரிப்பதற்கு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று ராஜீவ் காந்திக்கும், போபர்ஸ் பீரங்கி வாங்கியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நிலைக் குழு அறிக்கை சமர்ப்பித்தது.
 அதன்பிறகு, நீதிமன்றத்திலும் ராஜீவ் காந்திக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். அந்த விசாரணை முடிவிலும் ராஜீவ் காந்தி குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்தது. இதையெல்லாம் மறைத்து, ராஜீவ் காந்தி பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் தேர்தல் பிரசாரத்தில் மோடி அவதூறாகப் பேசியுள்ளார்.
 இந்திய கலாசாரப்படி மறைந்த ஒரு தலைவரை நாம் விமர்சனம் செய்வது கிடையாது. ஆனால், மோடி, தான் ஒரு பிரதமர் என்பதையும் மறந்து தரம் தாழ்ந்து பேசி வருகிறார். இது கண்டனத்துக்குரியது.
 மோடி பேசியதற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மோடிக்கு தோல்வி பயம் வந்த காரணத்தால் மனம்போன போக்கில் பேசி வருகிறார். ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார். இந்தத் தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மிகப்பெரிய அளவில் தோல்வியைச் சந்திக்கும். மக்களவைத் தேர்தலில் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இதைப் பார்க்கும்போது காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றி பெறவும், ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன. புதுவையில் எப்படி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பாஜக சதித் திட்டம் தீட்டியதோ, அதேபோல தில்லியிலும் ஆட்சியைக் கலைப்பதற்கான வேலையை பார்த்தார்கள். தங்களது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கவும், தங்களது ஆட்சியைக் கலைக்கவும் பாஜக சதி செய்கிறது என்று அரவிந்த் கேஜரிவால் பகிரங்கமாகக் கூறினார். அது தற்போது நிரூபணமாகி வருகிறது.
 மத்திய அரசின் நேரடிப் பார்வையில் தில்லி பிரதேசம் இருக்கிறது. தில்லி முதல்வருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கியது மத்திய அரசு. அதனால்தான் தில்லிக்கும், புதுவைக்கும் மாநில அந்தஸ்து கேட்கிறோம்.
 தமிழகத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும். தமிழக முதல்வராக ஸ்டாலின் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
 இந்தச் சூழலில் சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்து, எடப்படி பழனிசாமி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் நேரத்தில் பேரவைத் தலைவர் இதுபோலக் கடிதம் அனுப்பியுள்ளது ஜனநாயக விரோத செயல். இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. நீதிமன்றத்தில் கண்டிப்பாக 3 எம்எல்ஏக்களுக்கும் நீதி கிடைக்கும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com