ஜிப்மரில் ரோபோ உதவியுடன் சிறுமிக்கு பித்தநீர்க் கட்டி அகற்றம்: தென்னிந்தியாவில் முதல் முறை

தென்னிந்தியாவில் முதல் முறையாக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரோபோ உதவியுடன் 12 வயது சிறுமிக்கு பித்தநீர்க் கட்டியை அகற்றி, அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

தென்னிந்தியாவில் முதல் முறையாக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரோபோ உதவியுடன் 12 வயது சிறுமிக்கு பித்தநீர்க் கட்டியை அகற்றி, அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
 இந்த அறுவைச் சிகிச்சையை மயக்கவியல் மருத்துவர் சந்தீப் மிஸ்ரா தலைமையில் மருத்துவர் நவீன், குழந்தை நோய் அறுவைச் சிகிச்சை மருத்துவர் பிபேகானந்த் ஜின்டால், இரைப்பை அறுவைச் சிகிச்சை மருத்துவர் ஆர். கலையரசன் உள்ளிட்ட மருத்துவ வல்லுநர்களைக் கொண்டு அண்மையில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
 இந்த பித்தநீர்க் கட்டி என்பது பித்த நாளத்தில் பித்த நீர் குழாயில் தோன்றி பித்தப்பையில் சிதைவை ஏற்படுத்தும். பித்த நாளம் கல்லீரலிலிருந்து பித்த நீரை வடித்து குடலுக்கு அனுப்புகிறது. வழக்கமாக இது போன்ற நோயாளிகளுக்கு வயிற்றை கிழித்து பெரிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கட்டி அகற்றப்படுகிறது.
 இந்த அறுவை சிகிச்சைக்கான நோயாளி நீண்ட நாள் மருத்துவமனையில் தங்க வேண்டும். அதுமட்டுமன்றி அதிக வலியால் அவதிப்படவும் நேரிடும். மேலும், அறுவைச் சிகிச்சை செய்த வயிற்றுப்பகுதியில் பெரிய வடு தோன்றிவிடும். ஆனால், ரோபோட்டிக்கின் உதவியுடன் செய்யப்பட்ட இந்த அறுவைச் சிகிச்சையில், மருத்துவமனையில் குறுகிய காலம் இருந்தால் போதும். குறைவான வலியுடையது. வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்ததற்கான எந்த வடுவும் இருக்காது.
 ரோபோ உதவியுடன் நிகழ்த்தப்பட்ட இந்த பெரிய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஐந்தாவது நாள் முதல் சிறுமி மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறார். அவரால் முழு உணவையும் எடுத்துக்கொள்ள முடிகிறது.
 தென் இந்தியாவில் முதன் முதலில் ஜிப்மர் மருத்துவமனையில் ரோபோ உதவியுடன் குழந்தைகளுக்கு இந்த வகை அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
 இதுகுறித்து குழந்தைகள் அறுவைச் சிகிச்சை துறையின் தலைவர் மருத்துவர் பிபேகானந்த் ஜின்டால் கூறியதாவது: ஜிப்மர் மருத்துவமனையில் இதுவரை 350 நோயாளிகளுக்கும், 45 குழந்தை நோயாளிகளுக்கும் ரோபோ உதவியுடன் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவைச் சிகிச்சை ஒரு குழு இணைந்து செய்யப்படும் முயற்சியாகும்.
 இந்தக் குழுவில் மயக்கவியல் நிபுணர்கள், நர்ஸிங் ஊழியர்கள் பல்வகை ரோபோ சிகிச்சை நிபுணர்கள் இணைந்து செயல்படுகின்றனர் என்றார்.
 இது குறித்து ஜிப்மர் மருத்துவமனையின் மல்டி டிசிப்ளினரி ரோபோடிக் அஸிஸ்ட்டட் மினிமல் அக்ஸஸ் அறுவைச் சிகிச்சைப் பிரிவின் அதிகாரி மருத்துவர் எல்.என். துரைராஜன் கூறியதாவது: தென்னிந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஜிப்மர் மருத்துவமனையில் மட்டுமே இத்தகைய ரோபோ உதவியுடன் கூடிய அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
 தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய அறுவைச் சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மிகக் குறைந்த கட்டணத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com