புதுச்சேரி தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குகள் தேக்கம்! நிரந்தர நீதிபதியை நியமிக்க வலியுறுத்தல்

புதுச்சேரியில் தொழிலாளர் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக நிரந்தர நீதிபதி இல்லாமல் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.

புதுச்சேரியில் தொழிலாளர் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக நிரந்தர நீதிபதி இல்லாமல் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. நிரந்தர நீதிபதியை உடனடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
 புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்கள் சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-இல் அப்போதைய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், புதுச்சேரி தொழிலாளர் நீதிமன்றத்தைத் தொடக்கி வைத்தார்.
 தற்போது, புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகள், தொழிற்சாலை வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
 தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜி. தானேந்திரன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
 தற்காலிக நீதிபதியாக, குடும்பநல நீதிபதி சி. குமார் சரவணன் நியமிக்கப்பட்டு, தொழிலாளர் நீதிமன்ற வழக்குகளை வாரம் ஒருமுறை புதன்கிழமை பிற்பகலில் அரைநாள் மட்டும் தொழிலாளர் நீதிமன்றத்தின் வழக்குகளை நடத்தி வந்தார். நீதிபதி சி. குமார் சரவணனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
 தற்போது தொழிலாளர் நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளதால் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து தேக்கமடைந்து வருகின்றன.
 இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் நலச்சங்கத் தலைவர் த. ரமேஷ் கூறியதாவது:
 தொழிலாளர் நலச் சட்டங்களின்படி தொழில் தகராறு வழக்குகள் 90 நாள்களில் முடிக்கப்பட வேண்டும்.
 ஆனால், புதுச்சேரி தொழிலாளர் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக நிரந்தர நீதிபதி இல்லாததால் வழக்குகள் பல மாதங்களாக தேங்கி வருகின்றன. "தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்' என்பதை உணர்ந்தும், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர், புதுச்சேரி நீதிமன்ற பதிவாளர், புதுவை அரசு, துணை நிலை ஆளுநர், தொழிலாளர் துறைச் செயலர், தொழிலாளர் துறை ஆணையர் ஆகியோர் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் புதுச்சேரி தொழிலாளர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 மேலும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, பதிவாளர், புதுவை முதல்வர், துணை ஆளுநருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
 இது குறித்து தொழிலாளர் நீதிமன்ற வழக்குரைஞர் ஆர்.டி. சங்கர் கூறியதாவது: புதுச்சேரியில் தொழிலாளர் நீதிமன்றம் ஆரம்பித்த 6 மாதங்களாக நிரந்தர நீதிபதி நியமிக்கப்படாததால், நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததன் பேரில் நீதிபதி நியமிக்கப்பட்டார்.
 தற்போது, கடந்த ஓராண்டாக நிரந்தர நீதிபதி இல்லாமல் தொழிலாளர் நீதிமன்றம் இயங்கி வருகிறது.
 இதனால், நீதிமன்றத்தில் தனிநபர், தொழிலாளர்கள், இஎஸ்ஐ தொழில் தகராறு, சம்பளப் பிரச்னை, இடமாற்றப் பிரச்னை உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை உணர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக புதுச்சேரி தொழிலாளர் நீதிமன்றத்துக்கு நிரந்தர நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com