புதுவையில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கே உயர்கல்வி இட ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை

பள்ளிக் கல்வியை (ஒன்று முதல் பிளஸ் 2 வரை) புதுவையில் முழுமையாகப் படித்தவர்களுக்கு மட்டுமே உயர் கல்வியில் சென்டாக் உதவித்தொகையின் கீழ் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று

பள்ளிக் கல்வியை (ஒன்று முதல் பிளஸ் 2 வரை) புதுவையில் முழுமையாகப் படித்தவர்களுக்கு மட்டுமே உயர் கல்வியில் சென்டாக் உதவித்தொகையின் கீழ் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று புதுவை மாநில சென்டாக் மாணவர்கள், பெற்றோர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் நாராயணசாமி, பொருளாளர் வி.சி.சி.நாகராஜன் ஆகியோர் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை:
 சென்டாக் மூலம் விண்ணப்பிக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். பணத்துடன் நேரத்தையும் வீணடிக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.
 இந்த ஆண்டு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் அறிவித்து, அனைத்து விண்ணப்பங்களிலும் குடியிருப்புச் சான்றிதழ், பிராந்திய இட ஒதுக்கீட்டு சான்றிதழ்களை நுணுக்கமாக ஆராய்ந்து, தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, அதிகளவு கால அவகாசம் கொடுத்து கலந்தாய்வு நடத்த வேண்டும். இல்லையென்றால், நேர்மையான அதிகாரிகள் மூலம் சென்டாக் கலந்தாய்வு நடத்தினாலும் புதுச்சேரியில் மாணவர் சேர்க்கையில் தவறுகளும் முறைகேடுகளும் நிகழ்ந்து விடக் கூடும்.
 புதுவை மாணவர்களுக்கான சென்டாக் கல்வி உதவித்தொகையை பெறுவதற்காக வெளிமாநில பெற்றோர் குடியிருப்புச் சான்றிதழ்களை முறைகேடாகப் பெற்று மருத்துவம், பொறியியல் மற்றும் அனைத்துப் படிப்புகளிலும் தங்களது பிள்ளைகளை படிக்கச் செய்வதால், புதுவை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் பறிபோகின்றன. கடந்த ஆண்டு சென்டாக் மாணவர் சேர்க்கை பட்டியலில் இல்லாத ஆந்திர மாநிலத்தில் படித்த இரு மாணவர்கள் ஏனாம் பிராந்திய இட ஒதுக்கீட்டில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் முறைகேடாக சேர்ந்து படித்து வருகின்றனர்.
 சென்டாக் மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடுகள் நடக்காமல் இருக்கவும் புதுவை மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை கிடைக்கவும் புதுவை மாநிலத்தில் பிறந்து ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை புதுவையில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே சென்டாக் மூலமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், பிராந்திய இட ஒதுக்கீட்டு இடங்களையும் வழங்கும் விதிமுறைகளை கொண்டுவர வேண்டும். மேலும் சென்டாக் மூலம் விண்ணப்பிக்கும் தேதியை விரைவில் அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com