முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது
By DIN | Published On : 18th May 2019 07:54 AM | Last Updated : 18th May 2019 07:54 AM | அ+அ அ- |

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
புதுவை மாநிலம், திருபுவனை அருகே மதகடிப்பட்டு சந்திப்பில் திருபுவனை போலீஸார் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் சந்தேகப்படும்படி வந்த 3 பேரைப் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், சென்னை கல்லுக்குளம் கண்ணகி தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் விவேக் (எ) கமல் (21), மரக்காணம் வடநீலகுணம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மோகன்தாஸ் (20), புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த துரியோதனன் மகன் சூர்யா (20) என்பதும், இவர்கள், புதுச்சேரி தன்வந்திரி நகர், பெரியக்கடை, வில்லியனூர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டதும், திருடிய மோட்டார் சைக்கிள்களில் திருபுவனை பகுதிகளில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸார் விவேக், மோகன்தாஸ், சூர்யா ஆகிய மூவரையும் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 3 விலை உயர்ந்த மோட்டார் பைக்குகள், திருபுவனை அருகே கே.டி. குப்பம் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதியிடம் கடந்த 2018 -ஆம் ஆண்டு பறித்துச் சென்ற 5 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.