மாமூல் கேட்டு தகராறு: அரசியல் பிரமுகர்கள், ரெளடி மீது வழக்கு
By DIN | Published On : 18th May 2019 07:54 AM | Last Updated : 18th May 2019 07:54 AM | அ+அ அ- |

வில்லியனூரில் மாமூல் கேட்டு கடையில் தகராறு செய்ததுடன், போலீஸை தாக்கிவிட்டு ரெளடி தப்பியோடிய விவகாரம் தொடர்பாக ரெளடி மற்றும் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் மீது போலீஸார் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் சிவகணபதி நகரைச் சேர்ந்தவர்கள் பாபு (37), சிவா (35). சகோதரர்களான இவர்கள் அதே பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகில் மளிகைக் கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 15- ஆம் தேதி இரவு அங்கு வந்த வில்லியனூர் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த ரெளடி சாந்தமூர்த்தி, கடையில் மாமூல் கேட்டு மிரட்டினாராம்.
தகவலறிந்து அங்கு வந்த வில்லியனூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பாஸ்கரன், காவலர் லியோத்தி கவுசன் ஆகியோர் தகராறில் ஈடுபட்ட சாந்தமூர்த்தியை பிடிக்க முயன்றனர். ஆனால் சாந்தமூர்த்தி, போலீஸாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவர்களைத் தாக்கினாராம்.
அப்போது, அங்கு வந்த ரெளடி சாந்தமூர்த்தியின் அண்ணனான காங்கிரஸ் பிரமுகர் சம்பத், கோனேரிக்குப்பம் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் தாமோதரன் உள்ளிட்டோர் போலீஸாரை சமாதானப்படுத்தி, சாந்தமூர்த்தியை அழைத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வில்லியனூர் வியாபாரிகள், ரெளடியைக் கைது செய்யக் கோரி வியாழக்கிழமை கடையடைப்பு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, மளிகைக் கடை உரிமையாளர் சிவா அளித்த புகாரின் பேரில், வில்லியனூர் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, தப்பியோடிய ரெளடி சாந்தமூர்த்தியை தேடி வருகின்றனர்.
இதனிடையே மாமூல் கேட்ட ரெளடி, போலீஸாரை தாக்கி மிரட்டல் விடுக்கும் விடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதைப் பார்த்த டி.ஜி.பி. சுந்தரி நந்தா, உடனடியாக பாதிக்கப்பட்ட காவலரிடம் புகார் பெற்று, நடவடிக்கை எடுக்க காவல் நிலைய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, தலைமைக் காவலர் பாஸ்கரனின் புகாரைப் பெற்ற வில்லியனூர் போலீஸார், ரெளடி சாந்தமூர்த்தி, சம்பத், தாமோதரன் மீது போலீஸை தரக்குறைவாகப் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், குற்றவாளியைத் தப்பவிடுதல் உள்ளிட்ட பிணையில் வெளிவர முடியாத 4 பிரிவுகளின் வழக்குப் பதிந்து, ரெளடி சாந்தமூர்த்தி உள்பட 3 பேரைத் தேடி வருகின்றனர்.