இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 20th May 2019 08:44 AM | Last Updated : 20th May 2019 08:44 AM | அ+அ அ- |

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனைக் கண்டித்து, புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி மில் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கோட்டச் செயலாளர் முருகையன் தலைமை வகித்தார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, இந்து மதத்தினரை தீவிரவாதத்துடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கமல்ஹாசனை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும், சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், மாநிலத் தலைவர் அ.வா. சனில்குமார் சிறப்புரை நிகழ்த்தினார். பாஜக மாநில துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம் வாழ்த்திப் பேசினார்.
போராட்டத்துக்கு இடையே இந்து முன்னணியினர் கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதனை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உருளையன்பேட்டை போலீஸார் தடுத்து நிறுத்தினர். நகரச் செயலர் செழியன் நன்றி கூறினார். இதில் திரளான இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.