ஜிப்மர் காவலாளியை காரை ஏற்றி கொல்ல முயற்சி: இருவர் கைது
By DIN | Published On : 20th May 2019 08:45 AM | Last Updated : 20th May 2019 08:45 AM | அ+அ அ- |

புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் காவலாளி மீது காரை ஏற்றிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர்.
புதுவை முத்தரையர்பாளையம் காந்திதிருநல்லூரைச் சேர்ந்தவர் ராஜா (32). கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிகிறார். சனிக்கிழமை நள்ளிரவில் ஜிப்மர் வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் ராஜா காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கு காரில் வந்த 4 பேர் தங்களது காரை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியிருந்தனராம். இதைப் பார்த்த ராஜா, காரை ஓரமாக நகர்த்தும்படி கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ராஜாவை தரக்குறைவாக திட்டியதுடன் காரை ஏற்றி கொல்ல முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜா ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தன்வந்திரி போலீஸார் வழக்குப் பதிந்து, தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான மேட்டுப்பாளையம் அன்னை சோனியாகாந்தி நகரைச் சேர்ந்த வினோத் (24), காமராஜ் நகர் கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்த பாலமுருகன் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவான மோகன்ராஜ், குமரன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.