போலீஸ்காரரை தாக்கிய ரெளடி கைது
By DIN | Published On : 20th May 2019 08:42 AM | Last Updated : 20th May 2019 08:42 AM | அ+அ அ- |

வில்லியனூரில் போலீஸ்காரரை தாக்கிய ரெளடி, திண்டுக்கல்லில் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி வில்லியனூர் அண்ணா சிலை அருகே சிவகணபதி நகரைச் சேர்ந்த சகோதரர்களான பாபு (37), சிவா (35) ஆகியோர் நடத்தி வரும் மளிகை கடையில் கடந்த 15 ஆம் தேதி இரவு வில்லியனூர் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த ரெளடி சாந்தமூர்த்தி மாமுல் கேட்டு மிரட்டி, கடை ஊழியரை தாக்கினார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வில்லியனூர் தலைமைக் காவலர் பாஸ்கரன், காவலர் லியோத்தி கெளசன் ஆகியோர் அவரை பிடிக்க முயற்சித்தபோது, அவர்களை சாந்தமூர்த்தி தாக்கிவிட்டு தப்பியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து சாந்தமூர்த்தி, அவரது அண்ணன் சம்பத் (40), தாமோதரன் ஆகியோர் மீது பிணையில் வெளியில் வர முடியாத அளவில் வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.
ரெளடியின் சகோதரரும் கைது: இந்த நிலையில், தமிழக மாநிலம், திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த சாந்தமூர்த்தியை (37) போலீஸார் சனிக்கிழமை பிடித்து புதுச்சேரிக்கு கொண்டு வந்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் சம்பத்தையும் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.