Enable Javscript for better performance
13 ஆண்டுகளாகியும் நிறைவடையாத உப்பனாறு மேம்பாலப்பணி! புதுச்சேரியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்- Dinamani

சுடச்சுட

    

    13 ஆண்டுகளாகியும் நிறைவடையாத உப்பனாறு மேம்பாலப்பணி! புதுச்சேரியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

    By DIN  |   Published on : 20th May 2019 08:42 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரியில் உப்பனாறு மேம்பாலம் 13 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாததால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. இந்தப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
    புதுச்சேரி அண்ணா சாலை, மறைமலையடிகள் சாலை, காமராஜர் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், நகரின் மையப்பகுதி வழியாகச் செல்லும் உப்பனாறு கழிவுநீர் வாய்க்கால் மீது மேம்பாலம் அமைக்க கடந்த 2006 ஆம் ஆண்டு, அப்போதைய அரசு முடிவு செய்தது. காமராஜ் சாலையிலிருந்து, மறைமலை அடிகள் சாலை வரை 732 மீ. நீளத்திலும், 12 மீ. அகலத்திலும் மேம்பாலம் கட்டுவதற்கு, ஹட்கோ (நகர்ப்புற கட்டுமான மேம்பாட்டுக் கழகம்) கடனுதவியுடன் கடந்த 2006 அக்டோபர் 21-இல் ரூ. 28 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு, சென்னையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ரூ. 27 கோடிக்கு பணிஆணை வழங்கப்பட்டது. 
    இதையடுத்து, சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தால் (ஐஐடி) ஒப்புதல் அளிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் வரைபடத்தின் படி, தனியார் கட்டுமான நிறுவனம் பணிகளை மேற்கொண்டது. இதில், ரூ. 3,35,43,900 மதிப்பீட்டில் 22 கடைக்கால் தூண்கள் அமைக்கப்பட்ட பிறகு, ஹட்கோ கடனுதவி கிடைக்காதது மற்றும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2008 செப்டம்பரில் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, 7 ஆண்டுகளுக்குப் பிறகு, உப்பனாறு வாய்க்கால் மீது மேம்பாலத்தை ரூ. 43.15 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டு, கடந்த 2015 டிசம்பர் 31 ஆம் தேதி மதுரையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு ரூ. 42,49,86,190-க்கு பணிஆணை வழங்கப்பட்டது.  2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2018 ஜூலை மாதம் வரை மேம்பாலப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற நிலையில், இதுவரை அந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
    வீணாகும் வரிப்பணம்: இதுகுறித்து புதுவை மக்கள் மன்றத் தலைவர் மு. நாராயணசாமி கூறியதாவது: 2 ஆண்டுகளில் கட்டப்பட வேண்டிய இந்த மேம்பாலப் பணி 13 ஆண்டுகளாகியும் முடிவுறாத நிலை உள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் பல கோடி அளவுக்கு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த பாலம் கட்டுமானப் பணி காரணமாக உப்பனாறு வாய்க்காலில் கழிவுநீர் தேக்கப்படுவதால் கொசு உற்பத்தி அதிகமாகி, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். எனவே, மக்களின் நலன் கருதி இந்தப் பாலப் பணியை விரைந்து முடித்து, திறக்க வேண்டும் என்றார் அவர்.
    நிதி கிடைத்தால் நிறைவேறும்: இதுகுறித்து புதுவை மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: 
    மாநில அரசின் நிதி நெருக்கடி காரணமாக உப்பனாறு மேம்பாலத் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது, கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, ஹட்கோ கடனுதவி ரூ. 54.51 கோடிக்கும், மாநில அரசின் நிதியுதவி ரூ. 7.35 கோடிக்கும் சேர்த்து ரூ. 61.86 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் உடனடியாக மாநில அரசின் நிதியான ரூ. 7.35 கோடி கிடைத்தால், மேம்பாலப் பணிகளை நிறைவு செய்ய உதவியாக இருக்கும். ஒப்புதல் கிடைத்ததும் பணிகளை முடித்து, 6 மாதத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பாலம் திறக்கப்படும் என்றனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp