தேர்தல் விதிகள் தளர்வு: லாரிகளில் வந்த ரேஷன் அரிசி முழு வீச்சில் விநியோகம்

தேர்தல் விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில், புதுச்சேரிக்கு 11 லாரிகளில் வந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

தேர்தல் விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில், புதுச்சேரிக்கு 11 லாரிகளில் வந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
 புதுவை மாநிலத்தில் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கும் பணி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. நகர, கிராமப்புறங்களில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி விநியோகிக்கப்பட்டது.
 தேர்தல் விதிகள் அமலில் இருந்ததால், வெளி மாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு வர வேண்டிய ரேஷன் அரிசி மூட்டைகள் வராமல் இருந்தன. இதனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே, ரேஷன் அரிசி விநியோகம் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
 இந்த நிலையில், புதுச்சேரிக்கு திங்கள்கிழமை காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 11 லாரிகளில் 270 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
 இவையனைத்தும் தட்டாஞ்சாவடிக்கு வந்த நிலையில், அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், சோதனை செய்து, அரிசி மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
 மாதிரிகள் தர பரிசோதனை செய்யப்பட்டவுடன், அதிகாரிகள் உத்தரவுக்குப் பின், அந்தந்த ரேஷன் கடைகளில் அரிசி விநியோகிக்ப்படும் எனத் தெரிகிறது.
 கடந்த காலங்களில் அரிசி அளவில் குறைபாடு, தரம் குறைவு உள்ளிட்ட காரணங்களுக்காக 7 லாரிகளில் வந்த அரிசியை அதிகாரிகள் திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
 இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் முடிந்துவிட்டதால் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ரேஷன் அரிசி லாரிகள் மூலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நாங்கள் ஆய்வு செய்து உடனுக்குடன் மாதிரி எடுத்துவிட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வருகிறோம். இதுவரை 75 சதவீத ரேஷன் கடைகளுக்கு அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 அவை மக்களுக்கு முழு வீச்சில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள கடைகளுக்கும் ஓரிரு நாள்களில் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுவிடும் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com