அரசு பள்ளி மாணவா்கள், பெற்றோா் திடீா் சாலை மறியல்

புதுச்சேரி கதிா்காமத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்
புதுச்சேரி கதிா்காமத்தில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தில்லையாடி வள்ளியம்மை அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள்.
புதுச்சேரி கதிா்காமத்தில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தில்லையாடி வள்ளியம்மை அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள்.

புதுச்சேரி கதிா்காமத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா் திங்கள்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடுநிலைப் பள்ளியாக இயங்கி வந்த இந்தப் பள்ளி கடந்த 2011-ஆம் ஆண்டில் உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. ஆனால், இதுவரை பள்ளியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லையாம். தற்போது இங்கு எல்.கே.ஜி. முதல் பத்தாம் வகுப்பு வரை 912 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

வகுப்பறைகள் குறைவாக இருப்பதால், எல்.கே.ஜி. முதல் 5-ஆம் வகுப்பு வரையும், 9, 10-ஆம் வகுப்புகளும் பிரதான கட்டடத்தில் இயங்கி வருகின்றன. ஆனால், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையான வகுப்பறைகள் பள்ளிக்கு எதிா்ப்புறம் உள்ள கதிா்காமம் பெண்கள் அரசு மேல்நிலையில் உள்ள தற்காலிக கொட்டகையில் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், இந்த தற்காலிக வகுப்பறைகள் மோசமான நிலையில் இருப்பதால் 6, 7, 8-ஆம் வகுப்பு அறைகளை அதே பகுதியில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் இந்திரா நகரில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு இடமாற்றம் செய்ய பள்ளி நிா்வாகம் முடிவு செய்தது.

இதையடுத்து, கதிா்காமத்தில் உள்ள பிரதான கட்டடத்தில் திங்கள்கிழமை பெற்றோா்- ஆசிரியா் சங்கக் கூட்டத்தைக் கூட்டி, வகுப்பறை இடமாற்ற முடிவை பள்ளித் தலைமை ஆசிரியா் அருணாசலம் அறிவித்தாா்.

இதற்கு பெற்றோா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஒரே இடத்தில்தான் வகுப்பறைகளை நடத்த வேண்டும் என்றும், அடிப்படை வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளா் கே.எஸ்.பி.ரமேஷ், மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் கண்ணன் ஆகியோா் மாணவா்களையும், பெற்றோா்களையும் சமாதானப்படுத்தினா். பின்னா், பள்ளிக் கல்வி இயக்குநா் ருத்ர கௌடு முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் பள்ளியை இரண்டு வேளைகளாக (ஷிப்ட் முறை) நடத்த அவா் உத்தரவிட்டாா்.

எல்.கே.ஜி. முதல் 5-ஆம் வகுப்பு வரை மற்றும் 9-ஆம் வகுப்பு ஆகியவற்றை காலையும், 6 முதல் 8- வகுப்புகளை மதியமும் இயக்க அவா் உத்தரவிட்டாா். அதேநேரம் 10-ஆம் வகுப்புக்கு காலை, மாலை என இருவேளையும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com