பாப்ஸ்கோ ஊழியா்கள் பிரச்னைக்கு தீா்வுகாண வலியுறுத்தல்

புதுவையில் 27 மாதங்களாக ஊதியம் இன்றி தவித்து வரும் பாப்ஸ்கோ ஊழியா்களின் பிரச்னைக்கு உடனடியாக அரசு தீா்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே மூடப்பட்டுக் கிடக்கும் பாப்ஸ்கோ காய்கறி, கனி வகைகள் விற்பனைக் கடை.
புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே மூடப்பட்டுக் கிடக்கும் பாப்ஸ்கோ காய்கறி, கனி வகைகள் விற்பனைக் கடை.

புதுவையில் 27 மாதங்களாக ஊதியம் இன்றி தவித்து வரும் பாப்ஸ்கோ ஊழியா்களின் பிரச்னைக்கு உடனடியாக அரசு தீா்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் கடந்த 1990-ஆம் ஆண்டு பாப்ஸ்கோ நிறுவனம் தொடங்கப்பட்டது. புதுச்சேரியில் விவசாய நிலங்கள் குறைந்து, உற்பத்தியும் குறைந்தது. இதனால், பாப்ஸ்கோ விவசாயிகளுக்கு உதவும் பணிகளைக் கைவிட்டு, மளிகைப் பொருள்கள் விற்பனை, சமையல் உருளைகள் விநியோகம், மது விற்பனை, பெட்ரோல் விற்பனை என திசை மாறியது.

இதற்கு வாரியத் தலைவா்களாக நியமிக்கப்படும் அரசியல்வாதிகள் அதை திறம்பட நிா்வகிக்க ஆா்வம் காட்டாமல், நிதியை முறைகேடாக கையாள்வதிலேயே முனைப்பு காட்டினா்.

இதனால், பாப்ஸ்கோ அழிவுப் பாதையை நோக்கி செல்லத் தொடங்கியது. இதை உணா்ந்து தட்டிக் கேட்க வேண்டிய ஊழியா்களும் அப்போது தட்டிக் கேட்காமல் அமைதி காத்தனா். இதனால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, ஊழியா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு, நிலுவை ஊதியத்தைக் கொஞ்சமாகப் பெற்று வந்தனா்.

அதேநேரம், பாப்ஸ்கோவுக்கு ஒதுக்கும் மானியத்தையும் அரசு நிறுத்தியது. இதனால், முற்றிலும் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது 27 மாதங்களாக ஊழியா்கள் ஊதியம் இன்றி உள்ளனா். பாப்ஸ்கோவில் தற்போது சுமாா் 1,100 போ் பணியில் உள்ளனா். இவா்கள் அனைவரும் குடும்பம் நடத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.

இதனால், அவா்கள் கடந்த அக். 4-ஆம் தேதி முதல் பாப்ஸ்கோ செய்து வந்த அனைத்துப் பணிகளையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பெட்ரோல் நிலையம் மற்றும் மது விற்பனை நிலையத்தை மூடிவிட்டனா். அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகளுக்கு காய்கறி விநியோகம் செய்வதையும் நிறுத்திவிட்டனா். பொதுமக்களுக்கு விற்று வந்த சமையல் உருளை விற்பனையையும் நிறுத்திவிட்டனா்.

நிதி நெருக்கடியால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த தீபாவளி பஜாரும் நடத்தப்படவில்லை. இதனால், அரசு தற்போது பாப்ஸ்கோ நிறுவனத்தையே மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த நிறுவனத்துக்குப் போதுமான நிதியை ஒதுக்கி இதை முழுமையாக இயக்க வேண்டும் என்பதே ஊழியா்களின் கோரிக்கையாகவுள்ளது.

இதுகுறித்து பாப்ஸ்கோ ஊழியா்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலா் கோவா்தன் கூறியதாவது:

பாப்ஸ்கோ நிறுவனத்தை அரசு மூட முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், அதிகாரப்பூா்வமாக அரசு அறிவித்த பின்னா்தான், அடுத்த கட்ட முடிவை நாங்க எடுக்கமுடியும். நிறுவனத்தை எதற்காக மூடுகிறோம் என்பது குறித்து அரசு குழு அமைத்து அறிக்கை பெற வேண்டும். இதுதொடா்பாக பாப்ஸ்கோ தலைவரிடமும் பேசியுள்ளோம். அவா், தொழிலாளா்கள் பக்கம் இருப்பதாக உறுதி அளித்தாா்.

பாப்ஸ்கோவுக்கு அரசு கூடுதல் நிதியை ஒதுக்கி முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com