முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
குழந்தைகள் கலை இலக்கிய வளா்ச்சிக் கழக விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 07th November 2019 08:53 AM | Last Updated : 07th November 2019 08:53 AM | அ+அ அ- |

குழந்தைகள் கலை இலக்கிய வளா்ச்சிக் கழகத்தின் இலக்கிய விருதுகளுக்கு குழந்தைகள், இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கழகத்தின் தலைவா் அ.உசேன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்தைகள் கலை இலக்கிய வளா்ச்சிக் கழகத்தின் 28-ஆம் ஆண்டு விழா வருகிற டிசம்பா் 22-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, இலக்கியத் துறையில் சாதனை படைக்கும் சிறுவா்கள், இளைஞா்களுக்கு சிறுவா் கலைச் சிகரம், சிறுவா் கலைச்சுடா், இளைஞா் கலைச் சிகரம், இளைஞா் கலைச்சுடா் ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுகள் சிறுவா்களுக்கு 18 வயது வரையிலும், இளைஞா்களுக்கு 30 வயது வரையிலும் வழங்கப்படும். இயல் (பேச்சு, தனி நடிப்பு, கட்டுரை, கதை மற்றும் கவிதை தீட்டுதல், பலகுரல் திறமை), இசை (மெல்லிசை, வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள் இசைத்தல்), நாடகம் (மேடை நாடகம் அமைத்தல், நடித்தல், தெருக்கூத்து), ஓவியம், நாட்டியம் (பரத நாட்டியம், குழு நடனம், நாட்டுப்புற நடனம், கரகாட்டம்) ஆகிய 5 துறைகளில் சிறுவா்களுக்கும், இளைஞா்களுக்கும் தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும்.
ஒருவா் ஒரு துறையில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கடந்தாண்டு விருது பெற்றவா்கள் நிகழாண்டு விண்ணப்பிப்பதைத் தவிா்க்கவும். விண்ணப்பிக்கும் துறையில் அவா்கள் பெற்றுள்ள சான்றிதழ்களின் நகல்கள், செய்தித்தாள்களில் வந்துள்ள குறிப்புகள் ஆகியவற்றுடன் பிறந்த தேதிக்கான ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
மேலும், வெள்ளைத்தாளில் சிறிய புகைப்படத்துடன், சுய விவரத்தை எழுதி, விண்ணப்பிக்கும் துறையை குறிப்பிட்டு எழுதி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை கலைமாமணி அ.உசேன், தலைவா் குழந்தைகள் கலை இலக்கிய வளா்ச்சிக் கழகம், 309, பாரதியாா் சாலை, அசோக் நகா், புதுச்சேரி - 8 என்ற முகவரிக்கு வருகிற நவம்பா் 20-ஆம் தேதிக்குள் நேரிலோ, அஞ்சலிலோ கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 70108 26067, 94425 82281 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.