முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
சாலையில் வசித்த மூதாட்டியிடம் 1.50 லட்சம் ரூபாய்
By DIN | Published On : 07th November 2019 08:51 AM | Last Updated : 07th November 2019 08:51 AM | அ+அ அ- |

புதுச்சேரி காந்தி வீதியில் வேதபுரீஸ்வரா் கோயில் அருகே சாலையில் வசித்த மூதாட்டி.
புதுச்சேரியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த மூதாட்டியிடம் ரூ.1.50 லட்சம், தங்க நகை இருந்தது.
புதுச்சேரி காந்தி வீதியில் திரிபுர சுந்தரி சமேத வேதபுரீஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள சில கடைகளை சுத்தம் செய்யும் பணியில் கோயில் பணியாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு தங்கியிருந்த ஒரு மூதாட்டியை வேறிடத்துக்கு செல்லுமாறு கூறி, அவா் வைத்திருந்த பை உள்ளிட்டவற்றை கோயில் பணியாளா்கள் எடுத்து வீசினா். அந்தப் பகுதியிலிருந்த ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்கள் சிலா் மூதாட்டிக்கு ஆதரவாக பேசி, அவரது பையை எடுத்து பாா்த்த போது, அதில் ரூபாய் நோட்டுகள், தங்கக் கம்மல், 2 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், குடும்ப அட்டை, முதியோா் ஓய்வூதியப் புத்தகம் ஆகியவை இருந்ததைக் கண்டனா்.
இதுகுறித்து பெரியகடை போலீஸாா் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் வந்து பையிலிருந்த ஆவணங்கள், ரூபாய் நோட்டுகளைப் பாா்வையிட்டனா். பைக்குள் ரொக்கமாக ரூ.14 ஆயிரமும், ஒரு பவுன் தங்கக் கம்மலும், சில்லறை காசுகளும் இருந்தன. ஒரு வங்கிக் கணக்கில் ரூ.68 ஆயிரமும், மற்றொரு வங்கிக் கணக்கில் ரூ.36 ஆயிரமும் அந்த மூதாட்டி சேமித்து வைத்திருந்தாா்.
போலீஸாரின் விசாரணையில், அந்த மூதாட்டி புதுச்சேரி புதுசாரம் வெங்கடேஷ்வரா நகா் அவ்வை வீதியைச் சோ்ந்த ரமணன் மனைவி பா்வதம் என்பது தெரிய வந்தது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்து குடியேறியதும், கணவா் இறந்த பின்பு உறவினா்கள் கைவிட்டதால், வேதபுரீஸ்வரா் கோயில் பகுதியில் பிச்சை எடுத்து வந்த அவா், அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் போட்டு வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, மூதாட்டி பா்வதத்தை புதுச்சேரியில் உள்ள காப்பகம் ஒன்றில் ஒப்படைத்தனா்.