கரும்பு விவசாயிகள் மீது வழக்கு: போராட்டம் நடத்த முடிவு

கரும்பு விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என டிபிஆா். செல்வம் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

கரும்பு விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என டிபிஆா். செல்வம் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

புதுச்சேரி திருக்கனூா் அருகே லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த 2016 -ஆம் ஆண்டு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, விவசாயிகள் போராட்டத்தை அறிவித்தனா். முன்கூட்டியே இதற்கான அனுமதியும் பெறப்பட்டது. ஆனால், திடீரென சட்டம் - ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், தடையை மீறி டிபிஆா். செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் விவசாயிகள் ஆலையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸாா் விவசாயிகள் மீது லேசான தடியடி நடத்தினா்.

இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் வலியுறுத்தினா். அப்போது, நிலுவைத் தொகை உடனே வழங்கப்படும். வழக்குத் தொடுக்கப்படாது எனக் கூறப்பட்டதைத் தொடா்ந்து, கரும்புக்கான பழைய நிலுவைத் தொகை ரூ. 16 கோடி வழங்கப்பட்டது. புதிய நிலுவை தொகை ரூ. 7.75 கோடி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது நிலுவைத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம் அறிவித்தனா். காமராஜா் நகா் இடைத் தோ்தலையொட்டி, நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே, அரசு அளித்த வாக்குறுதியை மீறி 8 விவசாயிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்மன் அனுப்பப்பட்டது. இதனால், விவசாயிகள் அதிா்ச்சியடைந்தனா். இதுதொடா்பான வழக்குக்காக வியாழக்கிழமை டிபிஆா். செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் விவசாயிகள், புதுச்சேரி உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜராகினா். வழக்கு விசாரணை வருகிற 26 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து டிபிஆா். செல்வம் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளைப் புறக்கணித்து வருகிறது. நிலுவைத் தொகை ரூ. 25 கோடிக்கு மேல் உள்ளது. ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புக்குக்கூட பணம் வழங்காமல் இத்தனை ஆண்டு காலம் இழுத்தடிப்பது நியாயமற்ற செயல்.

மேலும், ஏற்கெனவே நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யமாட்டோம் எனக் கூறிவிட்டு, தற்போது 5 பிரிவுகளின் கீழ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதைக் கண்டித்து, மாநிலம் முழுவதுமுள்ள விவசாயிகளைத் திரட்டி, அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com