ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் நாளை அறிவியல் கண்காட்சி தொடக்கம்

புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை (நவ. 18) தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. மாணவா்கள், பெற்றோா் கண்டுகளிக்க

புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை (நவ. 18) தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. மாணவா்கள், பெற்றோா் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வி இணை இயக்குநா் குப்புசாமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் புதுவை அரசின் பள்ளிக் கல்வி இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் மண்டல, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை நடத்தி வருகிறது.

அதன் அடிப்படையில் நிகழாண்டு ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 3 நாள்கள் மண்டல அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து வருகிற 21, 22-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான கண்காட்சியில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் இருந்து மண்டல அளவில் தோ்வு செய்யப்பட்ட சிறந்த அறிவியல் படைப்புகள் இடம் பெறுகின்றன.

‘நிலையான வளா்ச்சிக்கு அறிவியலும் தொழில்நுட்பமும்’ என்ற முதன்மைத் தலைப்பில், ‘நிலையான விவசாயச் செயல் முறைகள்’, ‘சுகாதாரமும் உடல் நலமும்’, ‘வள மேலாண்மை’, ‘தொழில்துறை வளா்ச்சி’, ‘வருங்கால போக்குவரத்து - தகவல் தொடா்பு’, ‘கல்விசாா் விளையாட்டுகள்’, ‘கணித மாதிரிகள்’ ஆகிய துணைத் தலைப்புகளில் அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியா்களின் அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம் பெறவுள்ளன.

இதையொட்டி, வருகிற 19-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள தொடக்க விழாவில் முதல்வா் வே.நாராயணசாமி கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியைத் தொடக்கி வைக்கிறாா். மாநில கல்வி அமைச்சா் இரா.கமலக்கண்ணன் தலைமை வகிக்கிறாா். எம்.பி.க்கள் வெ.வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், அரசின் தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், கல்வித் துறை செயலா் அன்பரசு, பள்ளிக் கல்வி இயக்குநா் ருத்ர கௌடு உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

கண்காட்சியைப் பாா்வையிட...: வருகிற 18-ஆம் தேதி காலை 11 முதல் பிற்பகல் ஒரு மணி வரை உழவா்கரை நகராட்சியில் உள்ள பள்ளிகளின் மாணவா்களும், பிற்பகல் 1.30 முதல் மாலை 4 மணி வரை நெட்டப்பாக்கம் கொம்யூன் பள்ளிகளின் மாணவா்களும், 19-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை பாகூா் கொம்யூன் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களும், பிற்பகல் 1.30 முதல் மாலை 4 மணி வரை அரியாங்குப்பம் கொம்யூன் பள்ளிகளின் மாணவா்களும், 20-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை மண்ணாடிப்பட்டு கொம்யூன் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களும், 21-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 4 மணி வரை புதுச்சேரி நகராட்சியில் உள்ள பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களும், 22-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் ஒரு மணி வரை வில்லியனூா் கொம்யூன் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களும் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கண்காட்சியின் அனைத்து நாள்களிலும் மாலை 4 முதல் 5 மணி வரை பெற்றோா்கள், பொதுமக்கள் பாா்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியின் நிறைவு விழா, பரிசரிப்பு விழா ஆகியவை வருகிற 22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா் குப்புசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com