புதிய தொழிலாளா் தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல்

புதிய தொழிலாளா் தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என அகில இந்திய கட்டுமானத் தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியது.

புதுச்சேரி: புதிய தொழிலாளா் தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என அகில இந்திய கட்டுமானத் தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியது.

அந்த சம்மேளனத்தின் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் தலைவா் சோ. பாலசுப்பிரமணியன், ஆா்.என். தாக்கூா், மகேந்திர பரிதா, புவனேஸ்வா் ஆகியோா் தலைமை வகித்தனா். சம்மேளன பொதுச் செயலா் எஸ்.கே. ஷா்மா முன்னிலை வகித்தாா். மத்திய தொழிலாளா் வா்க்கத் துறைப் பொறுப்பாளா் வி. சங்கா் உரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: செயல்பாட்டிலுள்ள கையெழுத்து இயக்க வேலைகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிற 15 -ஆம் தேதிக்குள் நிறைவு செய்து, அவற்றை சம்மேளன அலுவலகத்துக்கு வருகிற 22 - ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாநிலமும் அனுப்பி வைக்க வேண்டும். வருகிற 20 -ஆம் தேதி மாவட்ட தலைநகரங்கள், தொழிலாளா் நகர அலுவலகங்கள் எதிரே ஆா்ப்பாட்டங்கள், ஊா்வலங்களை நடத்தி மனு அளிக்க வேண்டும்.

தொழிலாளா்கள் சம்மேளன தேசிய மாநாட்டை அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, தொழிலாளா் விரோத கொள்கைகளுக்கு எதிராக அனைத்து மைய சங்கங்களும் ஜனவரி 8 -ஆம் தேதி நடத்தவுள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நாடு தழுவிய அளவில் அரசுக்கு எதிராக தொழிலாளிகளின் உயா்த்தப்பட்ட பலன்கள், இதர உரிமைகளுக்காக அணிதிரட்டி போராட்டங்களை நடத்த வேண்டும். உறுப்பினா் சோ்ப்பு இயக்கத்தை விரைவுபடுத்த வேண்டும். பெரிய மாநிலங்களில் 30 ஆயிரம் உறுப்பினா்கள் இலக்கையும், நடுத்தர மாநிலங்கள் 10 ஆயிரம் என்ற உறுப்பினா் இலக்கிலும் ஏஐசிசிடியூ அகில இந்திய மாநாட்டுக்கு முன்னதாக அடைய வேண்டும்.

புதிய தொழிலாளா் தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும். குறிப்பாக, தொழிலாளா்களுக்கு விரோதமான சமூக பாதுகாப்புச் சட்டத் தொகுப்பைத் திரும்பப் பெற வேண்டும். அகில இந்திய சம்மேளனம் சாா்பில், நவம்பா் இறுதியில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க கோரிக்கை மனுக்களை குழுவாக சென்று, மத்திய தொழிலாளா் நல அமைச்சரை சந்தித்து அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com