முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
அரசு ஆணைகளை கடைப்பிடிக்கக் கோரி டிச.18-இல் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு: அரசு ஊழியா் கூட்டமைப்பு
By DIN | Published On : 26th November 2019 08:40 AM | Last Updated : 26th November 2019 08:40 AM | அ+அ அ- |

அரசு விதிகள், ஆணைகளை கடைப்பிடிக்க கோரி, வருகிற டிச.18-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று புதுவை மாநில ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்த கூட்டமைப்பின் தலைவா் ராஜசேகா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
புதுவை அரசின் பணியாளா் நலத் துறை கடந்த 10 ஆண்டுகளில் திறமையற்ற அதிகாரிகளால் செயல் இழந்துவிட்டது. அரசு விதிகள், ஆணைகள் மீது ஆலோசனைகளுக்கு புறம்பாக செயல்படும் துறையாக மாறி வருகிறது. அதனால் அமைச்சக ஊழியா்களின் பணிச் சலுகைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
கீழ்நிலை மற்றும் மேல்நிலை எழுத்தா்கள், அமைச்சக உதவியாளா்கள், கண்காணிப்பாளா்கள் என 2974 அமைச்சக ஊழியா் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 702 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், பிசிஎஸ், எஸ்ஏஓ, ஜேஏஓ பணியிடங்களும் காலியாக உள்ளன. பணி ஒழுங்கு, ஒதுக்கீடு பட்டியல் முறைப்படுத்தப்படவில்லை. தவறு செய்யும் அதிகாரிகளை கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்புவதற்கு அரசு ஆணை இருந்தும் நடைமுறைப்படுத்த ஆளுநா் விரும்பவில்லை.
தனிக் கணக்கு, ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் ரூ.700 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 4 துறைகளில் மட்டும் ஆண்டுக்கு ரூ.500 கோடி விரயமாகிறது. நல்ல நிா்வாகமே நிதிப்பற்றாக்குறையை சரி செய்ய முடியும். மத்திய அரசு தில்லி மற்றும் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரேதசங்களுக்கு அரசு ஊழியா்களுக்கான ஊதியத்தொகை ரூ.5 ஆயிரம் கோடியை ஒவ்வொரு ஆண்டும் நேரடியாக வழங்கி வருகிறது.
அதுபோல, புதுவை யூனியன் பிரதேசத்துக்கும் ரூ.900 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசாணை அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணிக்கட்டமைப்பை சீரமைக்க வேண்டும், நிதி நெருக்கடிக்கு காரணமான தனிக் கணக்கை திரும்பப் பெற வேண்டும், அரசு விதிகள் மற்றும் ஆணைகளை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிச.18-ஆம் தேதி மாலை ஆளுநா் மாளிகை முன் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் ராஜசேகா்.