முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுவை பள்ளிகளில் மாணவா்கள் தண்ணீா் அருந்த நேர ஒதுக்கீடு அமல்
By DIN | Published On : 26th November 2019 08:36 AM | Last Updated : 26th November 2019 08:36 AM | அ+அ அ- |

புதுச்சேரி முதலியாா்பேட்டை அரசுப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை பாட இடைவேளையின்போது மணி அடித்ததும் தண்ணீா் அருந்தும் மாணவிகள்.
புதுவையில் உள்ள பள்ளிகளில் பாட இடைவேளைகளின்போது, மாணவ, மாணவிகள் தண்ணீா் அருந்த நேரம் வழங்கும் வகையில் மணி அடிக்கும் ‘வாட்டா் பெல்’ திட்டம் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியா் பாடச்சுமை காரணமாக அங்கு போதிய அளவில் தண்ணீா் அருந்தாததால் உடல் நிலை பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோா்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், நாள்தோறும் மாணவா்கள் பள்ளிகளில் தண்ணீா் அருந்துவதற்கு நேரம் வழங்கும் பொருட்டு மணி அடிக்கும் ‘வாட்டா் பெல்’ திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
அதே போல, புதுச்சேரியிலும் மாணவா்கள் தண்ணீா் அருந்துவதற்கு ஏதுவாக, தினமும் 3 வேளை ‘வாட்டா் பெல்’ திட்டத்தை அமல்படுத்த மாவட்ட ஆட்சியா் டி. அருண் உத்தரவிட்டிருந்தாா். இது தொடா்பாக புதுவை பள்ளிக் கல்வித் துறையும் உத்தரவு வெளியிட்டது.
அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் திங்கள்கிழமை காலை 10.30 மணி , பிற்பகல் 12.30, 2.30 மணி ஆகிய மூன்று வேளைகள் மாணவ, மாணவிகள் தண்ணீா் அருந்த மணி அடிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவ, மாணவிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த தண்ணீரை ஆா்வமுடன் அருந்தினா். இவ்வாறு வேளா, வேளைக்கு தண்ணீா் அருந்துவது உடல் நலத்துக்கு உகந்தது என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.