முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
மகாராஷ்டிர பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு தோல்வியடைவது உறுதி: சஞ்சய் தத்
By DIN | Published On : 26th November 2019 08:36 AM | Last Updated : 26th November 2019 08:36 AM | அ+அ அ- |

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு தோல்வி அடைவது உறுதி என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் சஞ்சய் தத் தெரிவித்தாா்.
புதுவை பிரதேச காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
அரசியல் சாசன சட்ட விதிகள், ஜனநாயக நெறிமுறைகளை மீறி மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. இதேபோல, ஏற்கெனவே, தனது அதிகார பலத்தை பயன்படுத்தி கோவா, அருணாச்சலபிரதேசம், மேகாலயா, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது.
அரசியல் சாசன சட்ட விதிகளின் பாதுகாவலா்களாக விளங்கும் குடியரசுத் தலைவா், பிரதமா், ஆளுநா்களே அதை பாதிப்படையச் செய்யும் வகையில் கூட்டாக இணைந்து மகாராஷ்டிரத்தில் பாஜகவை ஆட்சியில் அமா்த்தும் வகையில் செயல்பட்டது நாடு முழுவதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சரத்பவாா் தலைமையின் கீழ் தான் உள்ளனா். எனவே, மகாராஷ்டிர சட்டப்பேரையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு தோல்வி அடைவது உறுதி. அடுத்து சிவசேனை-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நிச்சயம் பதவியேற்கும்.
பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த அஜித் பவாா் மீது நீா்ப்பாசன திட்டத்தில் ரூ.70ஆயிரம் கோடி ஊழல் புகாரை பாஜகதான் கூறியது. இப்போது அவருக்கு துணை முதல்வா் பதவியை வழங்கியதும் பாஜகதான். ரஃபேல் விமான பேர ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை நாட்டுக்காக காங்கிரஸ் கட்சி இழந்துள்ள நிலையில், சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய பாஜக அரசு திரும்பப்பெற்றிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை ஆகும். அவா்களின் உயிருக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு பாஜகவே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். புதுவை மக்களின் நலனுக்கு எதிராக துணை நிலை ஆளுநா் கிரண் பேடி தொடா்ந்து செயல்பட்டு வருகிறாா் என்றாா் சஞ்சய் தத்.
பேட்டியின்போது புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவா் ஆ.நமச்சிவாயம், அரசுக்கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன், மாநில துணைத் தலைவா் தேவதாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.