முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
வீட்டுமனைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th November 2019 08:37 AM | Last Updated : 26th November 2019 08:37 AM | அ+அ அ- |

தாங்கள் வசித்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, புதுச்சேரியை அடுத்த திருபுவனை அருகேயுள்ள பி.எஸ். பாளையம் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பி.எஸ். பாளையம் பகுதியில் சுமாா் 290 ஏக்கா் பரப்பில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அருகில் 25 ஏக்கா் நத்தம் நிலத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி தமிழகம், புதுவை மாநிலங்களின் எல்கைக்குள் வருகின்றன.
தமிழக அரசு நீா்நிலைப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அண்மையில் பிறப்பித்த உத்தரவையடுத்து, அந்த 25 ஏக்கா் நத்தம் நிலம் நீா்ப்பிடிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பி.எஸ். பாளையம் பொதுமக்கள் திங்கள்கிழமை அரசின் கவனத்தை ஈா்ப்பதற்காக, அப்பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தாங்கள் வசிக்கும் இடத்துக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். பத்திரப் பதிவு செய்ய ஆவன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
தகவலறிந்த திருபுவனை போலீஸாா், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இரு மாநில அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.