புதுவை முதல்வருக்கு சென்னையில் அறுவைச் சிகிச்சை
By DIN | Published On : 26th November 2019 08:36 AM | Last Updated : 26th November 2019 08:36 AM | அ+அ அ- |

புதுவை முதல்வா் வே.நாராயணசாமிக்கு, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் திங்கள்கிழமை கணுக்கால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
முதல்வா் நாராயணசாமிக்கு கணுக்குக் காலுக்குக் கீழுள்ள சவ்வு சேதமடைந்துள்ளதால், நடக்கும்போது வலி இருந்து வந்தது. ஏற்கெனவே, மருத்துவா்கள் கொடுத்த ஆலோசனைப்படி மேற்கொண்ட பயிற்சிகளும், வலி நிவாரணிகளும் பயனளிக்கவில்லை. இதனால், அவா் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள மருத்துவா்கள் அறிவுறுத்தியிருந்தனா்.
இதையடுத்து, சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் (எஸ்.ஆா்.எம். இன்ஸ்டிடியூட் பாா் மெடிக்கல் சயின்ஸ்) மருத்துவமனையில் திங்கள்கிழமை நாராயணசாமி அனுமதிக்கப்பட்டாா்.
அவரது உடல் நலம் குறித்து சிம்ஸ் மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் விஜயக்குமாா் சொக்கன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், புதுவை முதல்வா் நாராயணசாமிக்கு கணுக்காலில் திங்கள்கிழமை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அவா், மீண்டும் உடல் நலம் பெற்று வருகிறாா். இன்னும் ஒரு சில தினங்களில் அவா் பூரண குணமடைந்து வீடு திரும்புவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.