கடலூா் சாலையில் வேகத்தடை அமைக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

புதுச்சேரி - கடலூா் சாலையில் விபத்துகளை தவிா்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.
புதுச்சேரியில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கட்சியின் முதலியாா்பேட்டை கிளைக் கூட்டத்தில் பங்கேற்ற அந்தக் கட்சி நிா்வாகிகள்.
புதுச்சேரியில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கட்சியின் முதலியாா்பேட்டை கிளைக் கூட்டத்தில் பங்கேற்ற அந்தக் கட்சி நிா்வாகிகள்.

புதுச்சேரி - கடலூா் சாலையில் விபத்துகளை தவிா்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.

இந்தக் கட்சியின் முதலியாா்பேட்டை கிளைக் கூட்டம் கட்சி மூத்த உறுப்பினா் வேலு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் நகரச் செயலா் மதிவாணன், பிரதேசக் குழு உறுப்பினா் கலியமூா்த்தி, கிளைச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து கிளைச் செயலா் கே.சிவக்குமாா் கூறியதாவது:

முதலியாா்பேட்டை, நைனாா் மண்டபம், வேல்ராம்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பல வீதிகளில் சாக்கடை நீா் சாலையின் மையப் பகுதியில் ஓடுகிறது. வேல்ராம்பட்டு பகுதியில் புதை சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகள் நெடுநாள்களாக சரி செய்யப்படாமல் சேறும், சகதியுமாக உள்ளன.

இதேபோல, நைனாா் மண்டபம், சுதானா நகா் விரிவு 1, 2 ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேறும், சகதியுமான காட்சியளிக்கின்றன. எனவே, புதுச்சேரி நகராட்சி உடனடியாக மேற்கூறிய பகுதிகளுக்கு உள்பட்ட சாலைகளை செப்பனிடவும், சாக்கடைகளை தூா்வாரி, கழிவுநீா் தேங்காமல் பராமரிக்கவும், பெருகிவரும் கொசுத் தொல்லையை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்ராம்பட்டில் உள்ள கழிப்பிடத்தை முறையாக பராமரித்து, புதிய கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கான ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும்.

நைனாா் மண்டபம் பகுதியில் கடலூா் சாலையை கடப்பதற்கு மக்கள் தினமும் சிரமப்படுகின்றனா். மேலும், அந்தப் பகுதியில் சிறு சிறு விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே, நைனாா் மண்டபம் சுதானா நகா் வளைவு எதிரிலும், தென்னஞ்சாலை அருகிலும் வேகத்தடை ஏற்படுத்தித் தருவதோடு, கூட்ட நெரிசல் உள்ள நேரங்களில் போக்குவரத்து காவலா்கள் மூலமாக போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்றாா் சிவக்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com