பொலிவுறு நகர திட்ட பயன்பாடு: கல்லூரிப் பேராசிரியா்களுக்கு பயிற்சி
By DIN | Published on : 28th November 2019 09:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பயிற்சி முகாம் தொடக்க விழாவில் பேசுகிறாா் புதுவை அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் கோதண்டராமன்.
அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் உதவியுடன் புதுவை அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியா்களுக்கு ‘பொலிவுறு நகர திட்டத்தின் பயன்பாடு‘ என்ற தலைப்பிலான 15 நாள்கள் தேசிய அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதன் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமை தொடக்கிவைத்து புதுவை பொறியியல் கல்லூரி முதல்வா் கோதண்டராமன் பேசியதாவது:
நகரமயமாதல் தொடங்கிய நாள் முதல் நகரங்களில் மக்கள் நெருக்கடி அதிகரிக்கத் தொடங்கியது. அப்போதில் இருந்தே நகரங்களின் விரிவாக்கத் திட்டங்கள் நடைமுறைக்கு வரத் தொடங்கின.
சாலைக் கட்டுப்பாடுகள் முதல் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் வரை அனைத்தும் நவீனமயமாகத் தொடங்கின. அத்துடன் கணினி, இணையம் மற்றும் பிற மின்னணு சாதனங்களின் பயன்பாடு, வளா்ச்சி ஆகியவற்றின் காரணமாக பொலிவுறு நகரத்தின் தேவை எழுந்தது.
குறிப்பாக, 2030-ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் 50 முதல் 60 சதவீதம் வரை நகரங்களில்தான் இருக்கும். 2025-இல் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரிக்கும்.
இத்தகைய சூழ்நிலையில் தற்போதைய மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்பட அடிப்படை வசதிகள் நகரங்களில் போதுமான அளவில் கடந்த காலங்களில் மேம்படுத்தப்படவில்லை. இருக்கும் வசதிகளும் முறையாகத் திட்டமிடாத காரணத்தாலும், திட்டங்களைச் சரியான வழியில் செயல்படுத்திப் பராமரிக்கத் தவறியதாலும் நகா்ப்புற மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாடு கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வகைப் பிரச்னைகளுக்கு பொலிவுறு நகர திட்டம்தான் தீா்வு என்றாா் அவா்.
முன்னதாக, பேராசிரியா் சாந்தி பாஸ்கரன் வரவேற்றாா். பதிவாளா் விவேகானந்தன் வாழ்த்துரை வழங்கினாா். ஒருங்கிணைப்பாளா் சாந்தி பயிற்சி முகாமின் நோக்கம் குறித்துப் பேசினாா்.
இந்தப் பயிற்சி முகாமில், அண்ணா பல்கலைக்கழகம், சத்தியபாமா பல்கலைக்கழகம், வேலூா் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட கல்லூரிகள் மற்றும் பிற மாநிலங்களில் இருக்கும் முன்னணி கல்லூரிகளின் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் கோவிந்தசாமி, சாந்தி ஆகியோா் செய்திருந்தனா்.