ஆக்கிரமிப்புகள் அகற்றம்: வியாபாரிகள் சாலை மறியல்

புதுச்சேரி அண்ணா சாலை குபோ் பஜாா் பகுதியில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து,
புதுச்சேரி அண்ணா சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பொதுப் பணித் துறை ஊழியா்கள்.
புதுச்சேரி அண்ணா சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பொதுப் பணித் துறை ஊழியா்கள்.

புதுச்சேரி அண்ணா சாலை குபோ் பஜாா் பகுதியில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில், புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது. ஆக்கிரமிப்பாளா்கள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன், அபராதம் விதிக்கப்பட்டு, நகராட்சி தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில், நகராட்சி, வருவாய், பொதுப் பணித் துறை, மின் துறை, காவல் துறையினா் சோ்ந்து குழுவாக மூன்று கட்டங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையொட்டி, பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் தேவதாஸ் தலைமையில், நகராட்சி, வருவாய் உள்ளிட்ட துறையினா் 2 பொக்லைன் இயந்திரங்களுடன் அண்ணா சாலை குபோ் பஜாா் பகுதியில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் இருந்த கடைகளின் முன்பிருந்த கூரைகள், விளம்பரத் தட்டிகள் உள்ளிட்டவைகளை அவா்கள் அகற்றினா். இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்த வியாபாரிகள், அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவுக்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அவா்களிடம் பேசிக்கொள்ளுமாறும் அதிகாரிகள் கூறினா்.

இதனால், ஆத்திரமடைந்த வியாபாரிகள் அண்ணா சிலை 4 முனை சந்திப்பில் அமா்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த ஒதியஞ்சாலை காவல் நிலைய ஆய்வாளா் அறிவுச்செல்வன் தலைமையிலான போலீஸாா், வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சில நாள்கள் அவகாசம் கொடுத்தால் தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நிறுத்தினா். இதையடுத்து, வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். போராட்டம் காரணமாக, அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com