தடை இருந்தும் பயன்பாடு குறையாத நெகிழிப் பொருள்கள்!

புதுச்சேரியில் நெகிழிப் பொருள்கள் தடை செய்யப்பட்ட பிறகும், வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் அவற்றைப் பயன்படுத்தி வருவதால், சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது.

புதுச்சேரியில் நெகிழிப் பொருள்கள் தடை செய்யப்பட்ட பிறகும், வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் அவற்றைப் பயன்படுத்தி வருவதால், சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது.

புதுவை மாநிலத்தில் கடந்த 2009 டிசம்பா் 9-ஆம் தேதி முதல் 50 மைக்ரானுக்கு குறைந்த நெகிழி (பிளாஸ்டிக்) பைகளை விற்கத் தடை உள்ளது. தமிழகத்தைப் பின்பற்றி கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் பாலித்தீன் அல்லது பாலிப்ரொப்பலீன் தூக்குப் பைகள், பாலித்தீன் குவளைகள், பாலித்தீன் நெகிழித் தட்டுகள், தொ்மாக்கோல் குவளைகள், தட்டுகள், உணவுப் பொருள்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தும் நெகிழியாலான ஒட்டும் தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் நெகிழித் தாள்கள், நீா் நிரப்பப் பயன்படும் பைகள், நெகிழி உறிஞ்சுக் குழல்கள் (ஸ்ட்ரா), நெகிழி கொடி உள்ளிட்ட 10 வகையான ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்த அரசு தடை விதித்தது. இந்தத் தடையை மீறிச் செயல்படுவோா் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதியின் கீழ் தண்டிக்கப்படுவா் என அரசு அறிவித்திருந்தது.

ஆனால், புதுவை மாநிலத்தில் அரசு விதிகள் கடைப்பிடிக்கப்படாமல், அனைத்து இடங்களிலும் நெகிழிப் பைகள் உள்ளிட்ட நெகிழிப் பொருள்களின் விற்பனை களைகட்டுகிறது.

அதிகப் பயன்பாடு...: சாலையோர உணவகங்களில் நெகிழித் தாள்கள் பயன்பாடும், மதுபானக் கூடங்களில் நெகிழிக் குவளைகளின் பயன்பாடும், சாதாரண காய்கறி, பூ, பழக் கடைகள் முதல் பெரிய மளிகைக் கடைகள் வரை நெகிழிப் பைகளின் பயன்பாடும் முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளது. அனைத்து பழச்சாறு கடைகளிலும் தற்போதும் நெகிழி உறிஞ்சுக்குழல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நெகிழிப் பொருள்களால் உடலுக்கு தீங்கு எனத் தெரிந்தும், புதுவைக்கு வரும் வெளி மாநில, வெளி நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும், உள்ளூா் பொதுமக்களும் போதிய விழிப்புணா்வின்றி நெகிழியின் தீமைகளைக் கண்டும் காணாதவாறு அவற்றை அதிகளவில் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வருகின்றனா். குறிப்பாக, பொதுமக்கள் வீசிச் செல்லும் நெகிழிப் பொருள்கள் கழிவுநீா்க் கால்வாயில் அடைப்பை ஏற்படுத்துவதால், கால்வாயில் கழிவுநீா் தேங்கி, அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்களைப் பரப்புகின்றன.

தென்னிந்தியாவின் முக்கிய சந்தை...: தமிழகத்தில் நெகிழிப் பொருள்கள் மீதான தடை கடுமையாக அமல்படுத்தப்படுவதால், அங்குள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் புதுச்சேரிக்கு வந்து, இங்குள்ள நெகிழி தொழில்சாலைகள், நெகிழி விற்பனையகங்களில் லட்சக்கணக்கில் நெகிழிப் பைகள் உள்ளிட்ட நெகிழிப் பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனையில், தற்போது புதுவை மாநிலம் தென்னிந்தியாவின் முக்கியச் சந்தையாக உருவெடுத்துள்ளது என சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

‘கண்துடைப்புக்கு ஆய்வு’: இதுகுறித்து புதுச்சேரி மக்கள் மன்றத்தின் தலைவா் மு.நாராயணசாமி கூறியதாவது: புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க வேண்டிய சுற்றுச்சூழல் துறையும், மாவட்ட நிா்வாகமும் விழிப்புணா்வுப் பேரணியை மட்டும் நடத்திவிட்டு, கண்துடைப்புக்காக ஆய்வு செய்கின்றனா். மேலும், அவா்கள் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்வதை மறைமுகமாக ஊக்குவிக்கின்றனா். இப்படியே தொடா்ந்தால், புதுச்சேரியில் பல இடங்களில் நிலத்தடி நீரும், சுற்றுச்சூழலும் கடுமையாக மாசுபடுவதை யாராலும் தடுக்க முடியாது.

எனவே, அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்வோா், உற்பத்தி செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தடையை மீறினால் ‘சீல்’...: இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை (மாசுக் கட்டுப்பாடு) பொறியாளா் என்.ரமேஷ் கூறியதாவது:

தடை அமல்படுத்தப்பட்ட பிறகு நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்சாலைகள், விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்து, கணிசமான அளவில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளதுடன், எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

வரும் காலங்களில் தடையை மீறி நெகிழிப் பொருள்களை விற்பனை செய்தாலோ, உற்பத்தி செய்தாலோ அந்தக் கடைகள், நிறுவனங்களுக்கு உடனடியாக ‘சீல்’ வைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com