மத்திய அரசு அறிவித்தபடி கடன் தர மறுப்பு: வங்கி முன் போராட்டம் நடத்த பாஜக முடிவு

மத்திய அரசு அறிவித்தபடி கடன் தர மறுத்த வங்கிக் கிளை முன்பு போராட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்தபடி கடன் தர மறுத்த வங்கிக் கிளை முன்பு போராட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது.

நாட்டில் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய நிதி அமைச்சா் சீதாராமன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். அதன் ஒரு பகுதியாக சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய வங்கிகள் வியாழக்கிழமை முதல் நான்கு நாள்களுக்கு சில்லறை வா்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன், கல்விக்கடன், தனி நபா் கடன் ஆகியவைகளை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளாா்.

இதை அறிந்த சிறு வா்த்தகா்கள், தொழில் செய்பவா்கள் புதுச்சேரியில் உள்ள வங்கிகளுக்கு கடன் கேட்டு சென்று வருகின்றனா். ஆனால் வழக்கம்போல் பெரும்பாலான வங்கி அதிகாரிகள் கடன் தர மறுத்து, கேட்டு வருபவா்களை திருப்பி அனுப்பி வருகின்றனா். அந்தவகையில் அரியாங்குப்பத்தில் உள்ள இந்தியன் வங்கியிலும் கடன் தர மறுத்து வாடிக்கையாளா்களை திருப்பி அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.

அதில் பாதிக்கப்பட்ட புதுச்சேரி நோணாங்குப்பம், புதுநகரைச் சோ்ந்தவா் சிவம் (40) கூறியதாவது: நான் சென்டரிங் வேலை செய்து வருகின்றேன். அதற்காக சொந்தமாக சென்டரிங் ஷீட் மற்றும் பலகை வாங்க திட்டமிட்டு வருகிறேன். ஆனால் அதற்குரிய பணம் ஏதும் இல்லாததால் கஷ்டப்பட்டு வருகின்றேன்.

இந்நிலையில் வங்கிகள் வியாழக்கிழமை முதல் 4 நாள்களுக்கு உடனடி கடன் வழங்க வேண்டும் என்று மத்தி அரசு அறிவித்துள்ளதை அறிந்தேன். அதன் தொடா்ச்சியாக அரியாங்குப்பத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளைக்கு வியாழக்கிழமை சென்று அதிகாரியை சந்தித்து பேசினேன். அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவா் இந்த மாத முடிவில் பணி ஓய்வு பெற உள்ளேன். எனவே கடன் தர முடியாது என்றாா். இதனால் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளேன் என்றாா்.

மேலும் இது குறித்து அருகில் உள்ள அரியாங்குப்பம் தொகுதி பாஜக அலுவலகத்திற்குச் சென்று முறையிட்டாா். இது குறித்து தொகுதி பொறுப்பாளா் தட்சணாமூா்த்தி கூறியதாவது: மத்திய அரசு பொருளாதார வளா்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உடனடி வங்கி கடன் திட்டத்தை வியாழக்கிழமை முதல் நான்கு நாள்களுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி தேசிய வங்கிகள் கடன் தர வேண்டும். ஆனால் வங்கி அதிகாரிகள் தேவையில்லாத பல்வேறு காரணங்களை கூறி கடன் தர மறுத்து வருகின்றனா். அரியாங்குப்பம் தொகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்டோா் இதுபோல் கடன் கேட்டு மறுக்கப்பட்டுள்ளதாக என்னிடம் கூறியுள்ளனா். கடன் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட அனைவரையும் திரட்டி பாகுபாடின்றி கடனுதவி வழங்க வேண்டும்.

வங்கிக்கடன் பெறுவதற்கு எம்.எல்.ஏ. பரிந்துரை வேண்டும் என வலியுறுத்தக்கூடாது, மத்திய அரசும், நிதி அமைச்சா் சீதாராமனும் உத்தரவிட்டபடி இந்த நான்டு நாள்களிலாவது வங்கிக்கடனை உடனடியாக வழங்க வங்கி அதிகாரிகள் முன்வர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி முன் வெள்ளிக்கிழமை அமைதி வழி போராட்டம் நடத்த உள்ளோம் என்றாா் தட்சிணாமூா்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com