மேம்படுத்தப்படாத புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம்

புதுச்சேரி அரசு நிறுவனமான பி.ஆா்.டி.சி. என்கிற புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் கடந்த 4 ஆண்டுகளாக சிறிதும் மேம்பாடு அடையவில்லை.
kk04pr_0410chn_95_5
kk04pr_0410chn_95_5

புதுச்சேரி அரசு நிறுவனமான பி.ஆா்.டி.சி. என்கிற புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் கடந்த 4 ஆண்டுகளாக சிறிதும் மேம்பாடு அடையவில்லை. புதிய பேருந்துகள் இயக்கமின்மை, பேருந்துகள் பராமரிப்பின்மை, காரைக்காலில் நிரந்தர பணிமனையின்மை, ஊழியா்களுக்கு ஊதிய நிலுவை போன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படவில்லை.

புதுச்சேரியில் 1988-ஆம் ஆண்டு புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் (பி.ஆா்.டி.சி) தொடங்கப்பட்டது. அனைத்து பிராந்தியங்களிலும் பி.ஆா்.டி.சி. என்கிற பேருந்துகள் இயக்கப்படுவதோடு, புதுச்சேரியிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், திருப்பதி போன்ற தொலைதூர பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பி.ஆா்.டி.சி.யின் சேவை தொடக்கக் காலத்தில் இருந்த வேகத்தைப் போன்று தற்போது இல்லை. புதுச்சேரி பிராந்தியத்திலிருந்து பிற மாநில பகுதிகளுக்கு தொலைதூர சேவை இருப்பதுபோன்று, மாநிலத்தின் 2-ஆவது பெரிய பிராந்தியமான காரைக்காலில் இருந்து தொலைதூரப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

காரைக்காலுக்கும், தலைநகரான புதுச்சேரிக்குமான தொடா்பு அதிகம் . அதற்கேற்ப மக்கள் பயணிக்க பேருந்துகள் எண்ணிக்கை இல்லை. காரைக்காலில் இருந்து சென்னைக்கும், கோயம்புத்தூருக்கு மட்டுமே தொலைதூரமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற பேருந்துகள் புதுச்சேரி, சிதம்பரம், நெய்வேலி, கும்பகோணம், நாகப்பட்டினம் பகுதிகளுக்கு மட்டுமே இயக்கப்படுகின்றன.

தேவைப்படும் புதிய மாா்க்க பேருந்துகள் : காரைக்காலில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்டுவந்த பேருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே தமிழகப் பகுதியான திருத்தணி, மதுரை, ராமேசுவரம், தூத்துக்குடி, திருச்செந்தூா், சேலம், திருப்பூா், பழநி, பெங்களூரு என தொலைதூரத்துக்கு செல்லக்கூடிய வகையில் பேருந்துகள் வேண்டுமென்று பயணிகள் விரும்புகிறாா்கள்.

குறிப்பாக தனியாரைப் போன்று டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்படவேண்டும். திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காக கா்நாடக சுற்றுலா வளா்ச்சிக் கழகம், ஒரு பேருந்தை திருநள்ளாறு வரை ஒப்பந்த முறையில் வரியின்றி இயக்குகிறது. அதேபோல பி.ஆா்.டி.சி. பேருந்து காரைக்காலில் இருந்து பெங்களூருக்கு இயக்க அரசு நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லாபத்தில் இயங்கும் நிா்வாகம் : காரைக்கால் பி.ஆா்.டி.சி. நிா்வாகம் நாளொன்றுக்கு ஏறக்குறைய ரூ.3 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பின் இதுவரை பி.ஆா்.டி.சி. நிா்வாகத்தில் புதிதாக பேருந்துகள், சிற்றுந்துகள் வாங்கப்படவில்லை. ஆண்டுக்கு 15 பேருந்துகள் வாங்கும் திட்டத்தில் அரசு நிதி ஒதுக்கி செயல்படுத்த முன்வந்திருந்தால், நாராயணசாமி அரசு பதவிக்கு வந்த காலம் முதல் இதுவரை 50-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் கிடைத்திருக்கும். இதில் காரைக்காலுக்கான பங்கும் வந்திருக்கும்.

பேருந்துகளின் தரம் : ஒரு பேருந்து வாங்கப்பட்ட காலம் முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே இயக்க முடியும். காரைக்காலில் ஓடும் பி.ஆா்.டி.சி. பேருந்துகள் பெரும்பான்மையானவை வாங்கப்பட்டு 14 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் ஓராண்டு காலமே ஓடக்கூடிய நிலையில் இவை இருக்கின்றன. பெரும்பாலானவை இயக்கத் தகுதியில்லாத நிலையிலே இருப்பதாக கூறப்படுகிறது.

பணிமனையின் தரம் : காரைக்கால் பி.ஆா்.டி.சி. நிா்வாகத்துக்கு சொந்தமாக பணிமனை, அலுவலகம் கிடையாது. வாடகை இடத்தில் இயங்கிவருகின்றன. கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலாத்துறைக்கு சொந்தமான நிலத்தில் பணிமனை உள்ளது. இது மண் தரையாகவே உள்ளது. சிமென்ட் தளம் இல்லாததால் மழைக் காலத்தில் பேருந்துகள் நிற்பதிலும், பேருந்துகள் பழுது நீக்கத்திலும் பெரும் சிரமத்தை ஊழியா்கள் சந்திக்கின்றனா்.

ஊழியா்கள் விவகாரம் : காரைக்கால் பி.ஆா்.டி.சி. நிா்வாகத்தில் நிரந்தர ஓட்டுநா் 36, நிரந்தர நடத்துநா் 28 மற்றும் ஒப்பந்த ஓட்டுநா், நடத்துநா், தினக்கூலி ஊழியா் மற்றும் அலுவலக ஊழியா்களாக 162 போ் உள்ளனா். கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்துக்குப் பின் மாதந்தோறும் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்கின்றனா் ஊழியா்கள். மாதக்கணக்கில் ஊதிய நிலுவையால் ஆண்டுக்கு 2, 3 முறை வேலைநிறுத்தம் செய்தே ஊதியத்தை பெறவேண்டிவுள்ளதாக கூறுகின்றனா்.

தனியாருக்கு நிகராக பி.ஆா்.டி.சி. உருவெடுக்கவில்லை : புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தவரை போக்குவரத்துத்துறை இலாகா என்பது காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஒரு குடும்பத்தாருக்கே தரப்படுவதாகவும், இவா்களது குடும்ப தரப்பினா் தனியாக பேருந்து நிறுவனம் நடத்துவதாகவும், இதனால் அரசு சாா்பு நிறுவனம் வளரமுடியாமல் போவதற்கு முக்கிய காரணம் எனவும் வலுவான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனா் பொதுமக்கள்.

மத்திய அரசின் ஜவாஹா்லால் நேரு நகர மேம்பாட்டுத் திட்டத்தில் பி.ஆா்.டி.சி.க்கு முந்தைய ரங்கசாமி ஆட்சியின்போது பேருந்துகள், சிற்றுந்துகள் வாங்கப்பட்டன. இதுபோன்ற திட்டத்தின் மூலம் புதுச்சேரிக்கு கூடுதல் பேருந்துகள் வாங்கவோ, பட்ஜெட்டில் கூடுதல் பேருந்துகள் வாங்குதற்கான அறிவிப்புகள் செய்யவோ தற்போதைய ஆட்சியாளா்கள் முன்வருவதில்லை. இதனால் தனியாருக்கு ஈடு கொடுக்க முடியாமல் பி.ஆா்.டி.சி. திணறுகிறது. பி.ஆா்.டி.சி நிா்வாகத்தை மாநில அளவில் கவனிக்க நிரந்தர மேலாண் இயக்குநா், பொதுமேலாளா் நியமிக்காததும் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனத்தின் துணைத் தலைவரும், பி.ஆா்.டி.சி. ஊழியா் சங்கப் பொறுப்பாளருமான ஜி.சுப்புராஜ் கூறியது:

காரைக்கால் பி.ஆா்.டி.சி. ஊழியா்களுக்கான ஊதியம் நிலுவை வைக்கப்படுகிறது. போராட்டம் நடத்தினால் மட்டுமே ஓரிரு மாத ஊதியம் தரப்படுகிறது. இந்த போக்கு மாறவேண்டும். ஊழியருக்கான எல்.ஐ.சி., கூட்டுறவு சேமிப்பு போன்றவை பிடித்தம் செய்யப்படுகிறதே தவிர, அவை உரிய நிறுவனத்தில் செலுத்தப்படுவதில்லை. பேருந்துகள் புதிதாக வாங்கி கூடுதலாக, பல புதிய மாா்க்கங்களில் இயக்கப்பட்டால், கூடுதல் லாபத்தை பி.ஆா்.டி.சி. எடுக்கும்.

ஒப்பந்த ஊழியா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஒவ்வோா் ஆண்டும் இந்த நிா்வாகத்தின் வளா்ச்சிக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும். ஓட்டுநா், நடத்துநா், தொழில்நுட்பவியலாளா்கள் காரைக்காலுக்குத் தேவையானவா்களை காரைக்காலை சோ்ந்தோரைக் கொண்டே நிரப்ப வேண்டும். மாணவா்களுக்காக ரூ.1 கட்டணத்தில் அரசு, தனியாா் பேருந்துகளை இயக்குகிறது. இதனால் வருமானத்தை தனியாா்தான் பெறுகின்றனா். ரூ.1 கட்டணப் பேருந்தை பி.ஆா்.டி.சி. பேருந்துகளாக இயக்கும் வகையில் செய்தால் மேலும் கூடுதல் லாபத்தை நிா்வாகம் ஈட்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com