எதிர்க்கட்சிகள் மீது குறை கூறுவதை நாராயணசாமி நிறுத்த வேண்டும்: ரங்கசாமி

எதிர்க்கட்சிகள் மீது குறை கூறுவதை புதுவை முதல்வர் நிறுத்திவிட்டு, மக்கள் பணியாற்ற வேண்டும்

எதிர்க்கட்சிகள் மீது குறை கூறுவதை புதுவை முதல்வர் நிறுத்திவிட்டு, மக்கள் பணியாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா (எ) புவனேஸ்வரனை ஆதரித்து ரங்கசாமி, ஞானப்பிரகாசம் நகரில் செவ்வாய்க்கிழமை வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.
பிரசாரத்தின்போது, செய்தியாளர்களிடம் ரங்கசாமி கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ, அதே அதிகாரம்தான் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் இருந்தது. அதைக் கொண்டுதான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றினோம்.
ஆட்சியின் கடைசி நேரத்தில்கூட மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டத்தை செயல்படுத்தினோம். கல்வி உதவித்தொகையை ஆண்டுதோறும் முறையாக வழங்கினோம். வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்றினோம்.
தற்போதைய ஆட்சியில் எத்தனைத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன? எத்தனை புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன? தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது இந்த அரசு நிறைவேற்றியதா? சட்டப்பேரவையில்கூட மக்களைச் சந்திக்காத முதல்வர்தான் தற்போது உள்ளார்.
 எல்லா மாநிலங்களிலும் ஆளும் கட்சியைத்தான் எதிர்க்கட்சிகள் குறை கூறுவது வழக்கம். ஆனால், புதுவை மாநிலத்தில் ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளை குறை கூறி காலத்தை நகர்த்தி வருகின்றனர்.
சட்டப்பேரவையில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறிய குற்றச்சாட்டுகளில் ஒன்றுக்காவது பதில் கூறியிருப்பார்களா? மக்களைப் பற்றி சிந்தித்து, மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதுதான் ஆட்சியாளர்களின் வேலை. அதை தற்போதைய ஆட்சியாளர்கள் செய்யவில்லை. இதனால், காங்கிரஸ் ஆட்சி எப்போது மாறும் என்பது மக்களின் எண்ணமாக உள்ளது.
எதிர்க்கட்சிகள் மீது குறை கூறுவதை ஆளும் கட்சியினர் நிறுத்திவிட்டு, மக்கள் பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
அப்போது, அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆ.அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன், என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ. டிபிஆர்.செல்வம், அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரிமணிகண்டன்,  அதிமுக மாநில துணைச் செயலர் கணேசன், பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச் செயலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com