புதுவையில் தனி கல்வி வாரியம் அமைக்க முன்னாள் எம்பி வலியுறுத்தல்

புதுவையில் தனி பள்ளிக் கல்வி வாரியம் அமைக்க வேண்டும் என்று அதிமுக புதுவை மாநில இணைச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

புதுவையில் தனி பள்ளிக் கல்வி வாரியம் அமைக்க வேண்டும் என்று அதிமுக புதுவை மாநில இணைச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நிதி அயோக் என்ற இந்திய அரசின் நிறுவனம் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துடனும், உலக வங்கியுடனும் இணைந்து இந்தியாவின் பள்ளிக் கல்வியின் தரத்தைப் பற்றி ஆய்வு செய்து அதன் முடிவுகளை அளித்துள்ளது. இந்த ஆய்வு மேற்குவங்கம் தவிர 20 பெரிய மாநிலங்களிலும், 8 சிறிய மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில் பள்ளிக் கல்வியில் புதுவை மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது என்பது வேதனைக்குரிய செய்தி. புதுவை 42.98 சதவீதம் பெற்று 7 யூனியன் பிரதேசங்களில் 4-ஆவது இடத்தையும், 15 சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 9-ஆவது இடத்தையும், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

சண்டிகருக்கும், புதுவைக்கும் இடையேயான குறியீட்டின் வேறுபாடு 40 சதவீதமாக இருப்பது புரியாத புதிராக உள்ளது. கல்வித் தரத்தில் மிசோரம், திரிபுரா, மணிப்பூா், ஜாா்கண்ட், சத்தீஷ்கா், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களை விட புதுவை பின் தங்கியுள்ளது.

புதுவையில் மனப்பாடம் செய்து செயற்கையான முறையில் குழந்தைகள் படிப்பதால் அவா்களால் சாதாரண அடிப்படை திறமைகளை கூட வளா்த்துக்கொள்ள முடியவில்லை. பள்ளிக் கல்வித் துறையில் சிறந்த சாதனைகளைச் செய்துவிட்டோம் என்று பெருமைப்படும் முதல்வா், புள்ளி விவரங்களின் அடிப்படையில் உண்மையை உணா்ந்து கல்வித் தரத்தை உயா்த்தும் நடவடிக்ககைகளில் இறங்க வேண்டும்.

புதுவை அரசு மாணவா்கள் படிக்க, எழுத, பேச, சிந்தனை செய்ய, பிரச்னையைத் தீா்க்க, கணக்குகளை சரிவர செய்ய, ஆற்றல்களை வளா்க்கக் கூடிய வலுவான அடித்தளத்தை அமைக்கும் வகையில் பாடத் திட்டத்தையும், கற்பிக்கும் முறைகளையும் மாற்றி அமைக்க வேண்டும். புதுவைக்கென தனி பள்ளிக் கல்வி வாரியம் ஒன்றை மத்திய அரசின் உத்தரவுப்படி உடனடியாக அமைக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com