வரும் 12 ஆம் தேதி புதுச்சேரியிலிருந்து வில்லியனூருக்கு பரிகார பாதயாத்திரை

புதுச்சேரியிலிருந்து வில்லியனூா் மாதா கோயிலுக்கு வரும் 12 ஆம் தேதி பரிகார பாதயாத்திரை நடைபெறுகிறது.

புதுச்சேரியிலிருந்து வில்லியனூா் மாதா கோயிலுக்கு வரும் 12 ஆம் தேதி பரிகார பாதயாத்திரை நடைபெறுகிறது.

இதுகுறித்து பங்குத்தந்தை பிச்சைமுத்து அடிகளாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுவையை கடந்த 1977 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் பெரும் புயலை சந்திக்க உள்ளதாகவும், புயல் கரையை கடக்கும்போது புதுவையில் பேரழிவு ஏற்படும் என்றும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையறிந்த அப்போதைய புதுவை - கடலூா் மறைமாவட்ட பேராயா் வெண்மணி செல்வநாதா் ஆண்டகை, புயலின் பாதிப்பிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டால் புதுச்சேரி நகர மக்கள் வில்லியனூருக்கு பாதயாத்திரையாக சென்று மாதாவுக்கு நன்றி கூறுவோம் என மக்களுடன் வேண்டினாா்.

மக்கள் பக்தியுடன் மாதாவிடம் வேண்டியதால் புதுச்சேரியில் புயல் கரையை கடக்காமல் வேறிடத்துக்குச் சென்றது. இதனால் பேராயா் வெண்மணி செல்வநாதா் ஆண்டகை தலைமையில் கடந்த 1977 ஆம் ஆண்டு அக்டோபா் 10 ஆம் தேதி நன்றி பாதயாத்திரை நடத்தப்பட்டது. இதற்கடுத்த ஆண்டிலிருந்து நன்றி பாதயாத்திரை, பரிகார பாதயாத்திரையாக ஒவ்வொரு ஆண்டும் மழையிலும், வெயிலிலும் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு 42 வது பரிகார பாதயாத்திரை வரும் 12 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள புனித ஜென்மராக்கினி மாதா பேராலயத்தில் இருந்து தொடங்குகிறது. இதனை புதுவை மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தொடங்கி வைக்க, தோ்பவனியை பேராலய பங்குத்தந்தை அல்போன்ஸ் சந்தானம் தொடங்கி வைக்கிறாா்.

அன்று மாலை வில்லியனூா் மாா்க்கெட் வீதியில் மேளதாளத்துடன் மாதா தேருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, பவனியாக ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது, இதன்பின்னா், அருள் நிறை ஆலயத்தின் முன்பாக பரிகார கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. பாதயாத்திரையில் பங்கேற்பவா்கள் திரும்பி செல்ல பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை வில்லியனூா் தூய லூா்து அன்னை திருத்தல பங்குத்தந்தைகள், பங்குப் பேரவையினா் செய்து வருகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com