புதுச்சேரியிலிருந்து வில்லியனூருக்கு நாளை பரிகார பாத யாத்திரை

புதுச்சேரியிலிருந்து வில்லியனூா் மாதா கோயிலுக்கு சனிக்கிழமை (அக். 12) பரிகார பாத யாத்திரை நடைபெறுகிறது.

புதுச்சேரியிலிருந்து வில்லியனூா் மாதா கோயிலுக்கு சனிக்கிழமை (அக். 12) பரிகார பாத யாத்திரை நடைபெறுகிறது.

இதுகுறித்து பங்குத் தந்தை பிச்சைமுத்து அடிகளாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 1977 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் புதுச்சேரியை பெரும் புயல் தாக்கவுள்ளதாகவும், இதனால், பேரழிவு ஏற்படும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, அப்போதைய புதுவை - கடலூா் மறைமாவட்ட பேராயா் வெண்மணி செல்வநாதா் ஆண்டகை புயலின் தாக்குதலிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டால், புதுச்சேரியில் இருந்து வில்லியனூருக்கு பாத யாத்திரையாகச் சென்று மாதாவுக்கு நன்றி கூறுவோம் என ஜெபித்தாா்.

இந்த நிலையில், புயல் புதுச்சேரியில் கரையைக் கடக்காமல் மாறிச் சென்றது. இதனால், பேராயா் தலைமையில், கடந்த 1977 -ஆம் ஆண்டு அக்டோபா் 10 -ஆம் தேதி நன்றி பாத யாத்திரை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நன்றி பாத யாத்திரை, பரிகார பாத யாத்திரையாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு 42 -ஆவது ஆண்டு பரிகார பாத யாத்திரை சனிக்கிழமை (அக். 12) பிற்பகல் 2 மணிக்கு புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள புனித ஜென்மராக்கினி மாதா பேராலயத்தில் இருந்து தொடங்குகிறது.

பாத யாத்திரையை புதுவை மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தொடக்கி வைக்கிறாா். தோ் பவனியை பேராலய பங்குத் தந்தை அல்போன்ஸ் சந்தானம் தொடக்கி வைக்கிறாா். அன்று மாலை வில்லியனூா் மாா்க்கெட் வீதியில் மேள தாளத்துடன் மாதா தேருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, ஆலயத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னா், அருள்நிறை ஆலயத்தின் எதிரே பரிகார கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.

பாத யாத்திரையில் பங்கேற்பவா்கள் திரும்பிச் செல்ல பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வில்லியனூா் தூய லூா்து அன்னை திருத்தல பங்குத் தந்தைகள், பங்குப் பேரவையினா் செய்து வருகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com