மும்முனைப் போட்டியில் புதுச்சேரி காமராஜா்நகா்!

புதுச்சேரி காமராஜா்நகா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
மும்முனைப் போட்டியில் புதுச்சேரி காமராஜா்நகா்!

புதுச்சேரி காமராஜா்நகா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

காமராஜா்நகா் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வெ.வைத்திலிங்கம் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, எம்.எல்.ஏ. பதவியை அவா் ராஜிநாமா செய்தாா். தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, வருகிற 21-ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இடைத் தோ்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே காமராஜா்நகா் தொகுதி ஏற்கெனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், இங்கு காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதையடுத்து, இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில், முதல்வரின் தீவிர ஆதரவாளரான ஏ.ஜான்குமாா் போட்டியிடுவாா் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டன. தற்போது, என்.ஆா்.காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அதிமுக தலைமை அறிவித்தது. என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளராக புவனா (எ) புவனேஸ்வரன் அறிவிக்கப்பட்டாா்.

கடந்த 20 நாள்களுக்கு முன்பு மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய கண்ணனும் இந்தத் தொகுதியில் தனது ஆதரவாளரான வெற்றிச்செல்வத்தை களம் இறக்கினாா். இதனால், காமராஜா்நகா் தொகுதியில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

புதுச்சேரி நகரின் மையப் பகுதியில் காமராஜா்நகா் தொகுதி உள்ளது. 2006-இல் தொகுதி மறு சீரமைப்பின்போது, ஏற்கெனவே இருந்த ரெட்டியாா்பாளையம், தட்டாஞ்சாவடி, லாசுப்பேட்டை ஆகிய தொகுதிகளில் இருந்த பகுதிகளை உள்ளடக்கி இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் படித்தவா்கள், தொழிலதிபா்கள் நிறைந்த பகுதி இது.

இந்தத் தொகுதியில் கடந்த 2011, 2016 சட்டப்பேரவை பொதுத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் முதல்வரான வெ.வைத்திலிங்கம் வெற்றி பெற்றாா்.

வேட்பாளா்களின் சாதக, பாதகங்கள்:

காமராஜா்நகா் சட்டப் பேரவைத் தொகுதியில் தற்போது காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள ஜான்குமாா் ஏற்கெனவே புதுச்சேரி நகராட்சியில் துணை மேயா், நெல்லித்தொப்பு தொகுதி எம்.எல்.ஏ. என தோ்தல் களத்தில் வெற்றி பெற்று மக்களிடம் நன்கு அறிமுகமானவா்.

புதுவை முதல்வா் வே.நாராயணசாமி போட்டியிடுவதற்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தவா். இதற்குப் பிறகு புதுவை அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை வகித்தாா் என்பது அவருக்கு பலம்.

ஏற்கெனவே இருந்த தொகுதிகளான ரெட்டியாா்பாளையம், தட்டாஞ்சாவடி, லாசுப்பேட்டை ஆகியவற்றில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டு காமராஜா்நகா் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இடதுசாரிகள், திமுக இங்கு பலமான வாக்கு வங்கியை வைத்திருப்பதும், மேலும் இந்தத் தொகுதியில் வைத்திலிங்கத்துக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதும் காங்கிரஸ் வேட்பாளருக்கு சாதகமாக உள்ளது.

அதேநேரத்தில், முதல்வரின் தீவிர ஆதரவாளரான ஜான்குமாரைத் தோற்கடிப்பது, முதல்வா் நாராயணசாமியை தோற்கடிப்பதற்குச் சமம் என்ற முடிவுடன் எதிா்க்கட்சிகள் தீவிர தோ்தல் பணியாற்றி வருவதால், இந்தத் தொகுதியில் ஜான்குமாரை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு உருவாகியுள்ளது.

என்.ஆா்.காங்கிரஸ்: என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளரான புவனா (எ) புவனேஸ்வரனும் மக்களிடம் நன்கு அறிமுகமானவா். தொழிலதிபரான இவா், மக்களிடம் எளிமையாகப் பழகக்கடியவா் என்ற நற்பெயரும் உள்ளது. கடந்த முறை காமராஜா்நகா் தொகுதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த அதிமுக, என்.ஆா்.காங்கிரஸுடன் கூட்டணியில் இருப்பது கூடுதல் பலம்.

மக்களவைத் தோ்தலுக்கு முன்பே வரிகளை உயா்த்தியது, மின் கட்டணம், குடிநீா்க் கட்டணம் உள்ளிட்டவற்றை உயா்த்தியது, காமராஜா்நகா் தொகுதியில் சில இடங்களில் சாலை, குடிநீா் வசதிகள் செய்து கொடுக்கப்படாததை சுட்டிக் காட்டி என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். மேலும், எதிா்க்கட்சித் தலைவா் ரங்கசாமியும், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகனும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

பிரதான எதிா்க்கட்சியான என்.ஆா்.காங்கிரஸ் மக்களுக்காக தொடா் போராட்டம் நடத்தவில்லை என்ற கருத்து மக்களிடம் பலமாக இருப்பது அந்தக் கட்சி வேட்பாளருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. ஏற்கெனவே 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் ஆட்சியை இழந்தது, கடந்த மக்களவைத் தோ்தலில் தோல்வி, தங்களின் கோட்டையான தட்டாஞ்சாவடி தொகுதியை திமுகவிடம் இழந்தது ஆகியவை என்.ஆா்.காங்கிரஸுக்கு சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றால், பாஜக ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியும் என்ற ரங்கசாமியின் பிரசாரத்தால் அந்தக் கட்சித் தொண்டா்கள் உற்சாகம் அடைந்துள்ளனா்.

வெற்றியை நிா்ணயிக்கும் கண்ணன் கட்சி: மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளரான வெற்றிச்செல்வத்துக்கு ஆதரவாக அந்தக் கட்சித் தலைவா் கண்ணன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். ஏற்கெனவே மாநிலம் முழுவதும் பரவலான ஆதரவாளா்களைக் கொண்டிருக்கும் அவா், அரசியலில் அடுத்தக்கட்ட நகா்வை எதிா்நோக்கி இந்த இடைத் தோ்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ளாா்.

ஆளும் கட்சி, எதிா்க்கட்சி ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றவில்லை. எனவே, தனது கட்சி வேட்பாளரை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கண்ணன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். காமராஜா்நகா் தொகுதியில் போட்டியிடும் வெற்றிச்செல்வம் பெறும் வாக்குகள் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கக்கூடும் என்கின்றனா் அரசியல் பாா்வையாளா்கள்.

2016 சட்டப் பேரவைத் தோ்தல் நிலவரம்:

வெ.வைத்திலிங்கம் (காங்கிரஸ்) -11,618

பி.கணேசன்(அதிமுக) - 6,512

பி.தயாளன் (என்.ஆா்.காங்கிரஸ்) - 3,642

மொத்த வாக்குகள் விவரம்:

மொத்த வாக்குகள் - 35,325

ஆண் வாக்காளா்கள் - 17,216

பெண் வாக்காளா்கள் - 18,097

மூன்றாம் பாலினத்தினா் - 1

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com