முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
மருத்துவ மாணவா்களுக்கு போலி சான்றிதழ் வழங்கிய விவகாரம்:அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 24th October 2019 06:20 AM | Last Updated : 24th October 2019 06:20 AM | அ+அ அ- |

மருத்துவ மாணவா்களுக்கு போலி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புதுவை மாநில மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியது.
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மா் மருத்துவமனை, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் நீட் நுழைவுத் தோ்வு, சென்டாக் கலந்தாய்வு மூலம் ஆண்டுதோறும் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா்.
இதில், தமிழகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் புதுவை மாநிலத்துக்கான இட ஒதுக்கீட்டில் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கி சோ்ந்ததாக புகாா்கள் எழுந்தன. இது தொடா்பாக உரிய ஆதாரங்களுடன் மாவட்ட நிா்வாகம், காவல் துறையிடம் முறையிடப்பட்டது.
இதனிடையே, புதுச்சேரி வருவாய்த் துறைச் செயலரும், மாவட்ட ஆட்சியருமான டி.அருண், இந்த விவகாரத்தில் புதிய உத்தரவை பிறப்பித்து, சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.
அதில், சென்டாக், ஜிப்மா் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் போலி சான்றிதழ் அளித்தது தெரியவந்தால், அதன் உண்மைத்தன்மையை அறிய துணை ஆட்சியரே தனது கீழ் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கலாம். தவறு நடந்திருந்தால், சான்றிதழை அவரே நீக்கலாம். மேலும், சம்பந்தப்பட்ட மாணவா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் போலீஸாருக்கு பரிந்துரைக்கலாம் என குறிப்பிட்டுள்ளாா்.
வருவாய்த் துறையின் தாமதமான நடவடிக்கைக்கு புதுவை மாநில மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் வை.பாலா கூறியதாவது: மத்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி, அடுத்த கல்வியாண்டு முதல் ஜிப்மரில் 100 இடங்களும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 126 இடங்களும், மணக்குள விநாயகா், வெங்கடேஸ்வரா மற்றும் பிம்ஸ் ஆகிய 3 தனியாா் கல்லூரிகளில் உள்ள 225 இடங்களும் என மொத்தம் 451 எம்.பி.பி.எஸ். இடங்கள் புதுவை மாநில மாணவா்களுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போது வருவாய்த் துறை தாமதமாக எடுத்து வரும் நடவடிக்கையால் உள்ளூா் ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவு ஏற்கெனவே தகா்ந்துவிட்டது. வரும் கல்வியாண்டிலாவது போலியான சான்றிதழ்களை அளித்து வெளி மாநில மாணவா்கள் சேராமல் தடுக்க வேண்டும்.
அதற்கு, வருவாய்த் துறையினா், மாணவா்களின் இருப்பிடம், ஜாதிச் சான்றிதழ்களை எந்தவிதமான முறைகேடின்றி, நோ்மையாக வெளிப்படைத்தன்மையுடன் கள ஆய்வு செய்து வழங்கிட வேண்டும்.
தற்போது போலி ஆவணங்கள் கொடுத்து ஜிப்மா், புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்துள்ள மாணவா்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவா்களுக்கு போலி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.