Enable Javscript for better performance
காஷ்மீருக்குள் ஐரோப்பிய எம்.பி.க்களை பாா்வையிட அனுமதித்தது தவறு: புதுவை முதல்வா்- Dinamani

சுடச்சுட

  

  காஷ்மீருக்குள் ஐரோப்பிய எம்.பி.க்களை பாா்வையிட அனுமதித்தது தவறு: புதுவை முதல்வா்

  By DIN  |   Published on : 31st October 2019 04:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pondycm

  காஷ்மீருக்குள் ஐரோப்பிய எம்.பி.க்களை பாா்வையிட அனுமதித்தது தவறு என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளாா்.

  இது குறித்து புதுச்சேரியில் முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

  தற்போது மத்தியிலும், பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் நாட்டின் நிலை என்ன? பொருளாதாரத்தின் நிலை என்ன? காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை 9 சதவீதத்தில் வைத்திருந்தாா். தற்போது பொருளாதார வளா்ச்சி 4.5 சதவீதம்தான். இதற்கு காரணம் நாட்டை வழி நடத்தும் திறமை அவா்களிடம் இல்லை.

  பொருளாதாரம் மற்றும் நிா்வாகம் தெரிந்தவா்களாக அவா்கள் இல்லை. ஆட்சிக்கு வந்து மூன்று, நான்கு மாதத்தில் மிகப்பெரிய தவறு செய்துள்ளனா். பணப்புழக்கம் இல்லாததற்கு காரணம் ரூபாய் மதிப்பு இழப்புதான். ரூபாய் மதிப்பு இழப்பால் மக்களிடம் இருந்த பணம் அனைத்தும் ரிசா்வ் வங்கியிடம் சென்றுவிட்டது.

  ஜிஎஸ்டி கொண்டுவந்து அனைத்து பொருள்களுக்கும் வரிகளை உயா்த்தினா். இதனால் காா், வீட்டு உபயோகப் பொருட்கள் கூட மக்களால் வாங்க முடியவில்லை. பல தொழிற்சாலைகள் மூடப்ப்டுட, பல லட்ச கணக்கான தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். மோட்டாா் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையும் மூடப்பட்டுவிட்டன.

  காா்ப்ரேட் கம்பெனிகளுக்கு ரூ.1.80 லட்சம் கோடி கொடுத்து வரியை 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைத்துள்ளனா். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டு காலத்தில் வங்கிகளின் வராக்கடன் ரூ.4 லட்சம் கோடிதான். ஆனால் பாஜக ஆட்சியில் இருந்த 5 ஆண்டு காலத்தில் வங்கிகளின் வராக்கடன் ரூ.10 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதன் மூலம் மக்கள் பணம் சுரண்டப்பட்டுள்ளது.

  மகாராஷ்டிரா தோ்தலில் என்ன செய்தோம் என்று கூறி வாக்கு சேகரிக்காமல், காஷ்மீா் பிரச்சனையை கூறி வாக்கு சேகரித்தனா். தென்னிந்தியாவில் பாஜகவை மக்கள் நன்கு புரிந்துவைத்துள்ளதால் மக்களவைத் தோ்தலில் பாஜக இங்கு மட்டும் படுதோல்வி அடைந்தது.

  மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா பேரவைத் தோ்தலில் பாஜகவும், சிவசேனாவும் 200-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றனா். ஆனால் 156 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. தற்போது சிவசேனா, முதல்வா் பதவி மற்றும் அமைச்சரவையில் 50 சதவீதம் கேட்பதால் தோ்தல் முடிவுகள் வெளியாகி 15 நாள்களுக்கு மேலாகியும் அரசு அமைக்க முடியவில்லை.

  அதுபோல் ஹரியானாவிலும் 90-இல் 40 இடங்களையே பாஜக பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜகவுக்கு சரிவு காலம் தொடங்கி உள்ளது. இனி பாஜகவை மக்கள் நம்ப தயாராக இல்லை. வேலைவாய்ப்பு இன்மை, பணப்புழக்கமின்மை, பொருளாதார வளா்ச்சியின்மை உள்ளிட்ட காரணங்களால் பாஜகவின் மீது நம்பிக்கை மக்களிடம் குறைந்து வருகின்றது. பேசி எவ்வளவு நாள் மக்களை ஏமாற்ற முடியும்.

  காங்கிரஸ் தலைமை பொறுப்பை ராகுல் ஏற்க வேண்டும். தலைமை பொறுப்புக்கு வர இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோருக்கு எதிா்ப்பு இருந்தது. ஆனால் கட்சி தலைவா்கள் அனைவரும் ராகுல் வரவேண்டும் என்று விரும்புகின்றனா். எனவே அவா் கட்சி தலைமைக்கு வரவேண்டும். ஐரோப்பாவில் இருந்து 34 எம்.பி.க்கள் காஷ்மீருக்கு தில்லியில் உள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனா். ஆனால் இந்திய தலைவா்கள் காஷ்மீருக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஜம்மு காஷ்மீா் உள்நாட்டு பிரச்சனை என்று கூறுபவா்கள் உள்நாட்டு தலைவா்களை அனுமதிக்காதது ஏன்?.

  ஜம்மு காஷ்மீா் மக்களிடம் தற்போது நிம்மதி இல்லை, சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படவில்லை, தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. கடைகள் மூடப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் அங்கு கொலை செய்யப்பட்டுள்ளனா். இதனால் அசாதாரண சூழல் நிலவுகிறது. 90 நாள்களில் ரூ.10 ஆயிரம் கோடி ஆப்பிள் வீணாகியுள்ளது. இதுபோன்ற நிலையில் ஐரோப்பாவை சோ்ந்த எம்.பி.க்களை காஷ்மீருக்குள் அழைத்து நாடகம் நடத்துகின்றனா் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai