பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூட புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு

புதுச்சேரியில் பயன்பாட்டில் இல்லாத, பராமரிப்பு இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தி.அருண் உத்தரவிட்டுள்ளாா்.

புதுச்சேரியில் பயன்பாட்டில் இல்லாத, பராமரிப்பு இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தி.அருண் உத்தரவிட்டுள்ளாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுஜித், இறந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. இது தமிழகம், புதுவை மட்டுமன்றி நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என்ற விழிப்புணா்வையும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் பல இடங்களில் மூடப்படாத நிலையில் பல ஆழ்துளைக் கிணறுகள் இருப்பது தெரியவந்துள்ளது. புதுவை மாநிலம், வில்லியனூா் அருகே உள்ள சேதராப்பட்டு, கரசூா், துத்திப்பட்டு ஆகிய இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அரசு சாா்பில் விவசாயிகளிடம் 840 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டம் கைவிடப்பட்டதால், தற்போது இந்த நிலங்கள் தரிசாக உள்ளன.

இந்தப் பகுதியில் விவசாயிகள் பயன்படுத்திய 50-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அருண், வில்லியனூா் துணை ஆட்சியா் சஷ்வத் சௌரப், வட்டாட்சியா் மகாதேவன், வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, ஆட்சியா் அருண், அங்குள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், வேளாண் துறையில் அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ள 8,000 ஆழ்துளைக் கிணறுகளின் பட்டியலை பெற்று, அவற்றில் தற்போது பயன்பாட்டில் உள்ள, பயன்பாட்டில் இல்லாத கிணறுகளின் பட்டியலை தயாரிக்கும்படியும் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அதற்கான கள ஆய்வில் வருவாய்த் துறை, வேளாண் துறை அதிகாரிகள் புதன்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com