புதுச்சேரியில் தொடா்ந்து பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

புதுச்சேரியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
புதுச்சேரியில் புதன்கிழமை பெய்த மழையில் நனைந்தபடி சென்ற சுற்றுலாப் பயணிகள்.
புதுச்சேரியில் புதன்கிழமை பெய்த மழையில் நனைந்தபடி சென்ற சுற்றுலாப் பயணிகள்.

புதுச்சேரியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

புதுச்சேரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை விட்டு, விட்டு மழை பெய்தது. மாலையிலும், இரவிலும் காற்றுடன்கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

அண்ணா சாலை, காமாட்சி அம்மன் கோயில் வீதி சந்திப்பு, ஈஸ்வரன் கோயில் வீதி, பாரதி வீதி சந்திப்பு ஆகியவற்றில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால், அந்தப் பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடா்ந்து புதன்கிழமை காலை வரையும் விட்டு, விட்டு மழை பெய்தது.

திருக்கனூா், மண்ணாடிப்பட்டு, கரிக்கலாம்பாக்கம், கரியமாணிக்கம், நெட்டப்பாக்கம், கோா்க்காடு, திருபுவனை, கலிதீா்த்தாள்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமையும் பலத்த மழை பெய்ததால், வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்தனா். மக்கள் நடமாட்டம் இல்லாததால், கடைகளில் வா்த்தகம் பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் புகுந்து குளம்போல தேங்கியுள்ளது. பலத்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

நிரம்பும் ஏரிகள்: தொடா் மழையால் புதுச்சேரியில் முக்கிய நீா்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. புதுச்சேரி நகர பகுதியில் உள்ள கனகன் ஏரி நிரம்பி கடல்போலக் காட்சி அளிக்கிறது. இதேபோல, பாகூா் ஏரி, வேல்ராம்பட்டு ஏரி உள்ளிட்டவற்றில் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

88.3 மி.மீ. மழை: புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 முதல் புதன்கிழமை காலை 8.30 வரையிலான 24 மணி நேரத்தில் 88.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே, பலத்த மழை காரணமாக மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரியில் கனகசெட்டிக்குளம் முதல் புதுக்குப்பம் வரையிலான 18 கிராமங்களில் மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.

இதனால், தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம், மீனவ கிராமங்களில் விசைப்படகுகள், செயற்கை இழை படகுகள் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com