புதுவையின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகிறது மத்திய அரசு: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவையின் வளர்ச்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுவையின் வளர்ச்சிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
 புதுவை அரசின் நகர மற்றும் கிராம அமைப்புத் துறை, புதுச்சேரி நகர அமைப்பு குழுமம், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள தில்லி கட்டுமானப் பொருள்கள் மற்றும் தொழில்நுட்பம் ஊக்குவிப்புக் கழகம் ஆகியவை இணைந்து  "தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய இந்திய நிலப்படத் தொகுப்பு மற்றும் பேரழிவு தடுப்பு வடிவமைப்பு மற்றும் கட்டுமான நடைமுறைகள்' என்ற தலைப்பில் புதுச்சேரியில் ஒரு நாள் பயிலரங்கை புதன்கிழமை நடத்தின.
இதனை தொடக்கிவைத்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
 இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படக் கூடிய பகுதியாக புதுவை உள்ளது. சுனாமி, தானே புயல், கஜா புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போது, புதுவையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. ஆகவே, வெள்ளம், புயல், நில நடுக்கம், சுனாமி போன்றவற்றை தாங்கக் கூடிய கட்டடங்களை புதிய தொழில்நுட்பத்தில் புதுவையில் கட்ட வேண்டும். கட்டுமானப்பணியில் முறைகேடுகள் நடந்தால் அந்தத் திட்டங்கள் நிறுத்தப்படும். புதுவையின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக உள்ளது. புதுவை மேலும் வளர உதவ வேண்டிய மத்திய அரசு, இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.  
கருப்புப்பண நடமாட்டத்தை தடுப்பதாகக் கூறி மனை வணிக (ரியல் எஸ்டேட்) மற்றும் கட்டுமானத் தொழிலை முடக்கி விட்டது. இதனால் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கட்டடங்கள் கட்ட அனுமதி பெறுவதற்கு புதுச்சேரி நகர திட்ட குழுமத்துக்கு மக்கள் பல முறை வந்து அலைய வேண்டியுள்ளது. அதுபோல் இல்லாமல் அந்த அலுவலகம் மக்களுக்கு சேவையாற்றும் நண்பனாகச் செயல்பட வேண்டும். அரசு ஒப்பந்ததாரர்கள் கட்டும் கட்டடங்கள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் கழித்து பயனற்றுப் போய்விடுகின்றன. அவ்வாறு இல்லாமல் மிகத் தரமான கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 முன்னதாக,  ஊக்குவிப்புக் கழக நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் அகர்வால் வரவேற்றார். பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, வெங்கடேசன், மத்திய அரசுச் செயலர் துர்கா ஷங்கர் மிஸ்ரா, புதுவை அரசின் தலைமைச் செயலர் அஸ்வனி குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 இந்திய தொழில்நுட்ப நிறுவன நீரியல் துறை பேராசிரியர் கோயல், வெள்ளத்தை தாங்கக் கூடிய வீடுகளை கட்டுவது குறித்தும் அறிவியல்-தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) மற்றும் கட்டுமானப் பொருள் ஆராய்ச்சி மையம் (எஸ்இஆர்சி) அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி செல்வி ராஜன், காற்று மற்றும் சூறாவளியை தாங்கக் கூடிய கட்டுமானம் பற்றியும், இந்திய தொழில் நுட்ப நிறுவன சென்னை கட்டுமானத் துறை பேராசிரியர் மெஹர் பிரசாத்,  நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடிய வீடுகளை கட்டுவது பற்றியும் உரையாற்றினர். இதில் பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள், பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com