சுடச்சுட

  

  அமைச்சர் தொகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: அதிகாரிகளிடம் எம்எல்ஏ வாக்குவாதம்

  By DIN  |   Published on : 13th September 2019 10:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அமைச்சர் தொகுதியில் வியாழக்கிழமை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் ஆளும் கட்சி எம்எல்ஏ திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உள்பட்ட கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரி  எதிரில் புதுச்சேரி - கடலூர் சாலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை வியாழக்கிழமை புதுச்சேரி பொதுப்பணித் துறை தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவிப் பொறியாளர் ராமமூர்த்தி, வட்டாட்சியர் குமரன் மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 
  இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனவேலு எம்எல்ஏ, காரில் இருந்து இறங்கி, சம்பவ இடத்துக்கு வந்தார். அங்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.
  தொடர்ந்து, அவர், "சாலையோரமாக இட்லி கடை வைத்து அன்றாடம் பிழைப்பு நடத்தும் ஏழைகளிடமா உங்கள் அதிகாரத்தையும், சட்டத்தையும் காட்டுவீர்கள்? இங்குள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், பெரிய தொழிலதிபர்கள் ஏக்கர் கணக்கில் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை உங்களால் அகற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என்னுடைய தொகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் வேலையை வைத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்தால், பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என ஆவேசமாகப் பேசி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
  ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதி அமைச்சர் கந்தசாமியின் தொகுதிக்குள்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டது சிறிது
  நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai