சுடச்சுட

  

  பாகூர் அருகே மயானத்துக்குச் செல்லும் பாதையில் உள்ள பாலத்தை உடனடியாக கட்டித் தரக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   புதுச்சேரி அருகேயுள்ள பாகூர் கொம்யூன் பகுதிக்குள்பட்ட சோரியாங்குப்பம், குருவிநத்தம், இருளன்சந்தை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தென்பெண்னை ஆற்றின் கரையோரம் உள்ள மயானத்தை நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்றனர். 
  இந்த மயானத்துக்கு ஆற்றின் கரையோரமாகத்தான் செல்ல முடியும். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்தமழையில் மயானத்துக்குச் செல்லக்கூடிய சாலை, கான்கிரிட் பாலம் மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
  மழைநீரால் அடித்து செல்லப்பட்ட பாலத்தையும், குண்டும் குழியுமான சாலையும் அமைப்பதுடன், மயான சுற்றுச்சுவரையும் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து போராடி 
  வருகின்றனர். 
  இந்த நிலையில்,அப்பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து கோரிக்கையை வலியுறுத்தி பாகூரில் சவப்பாடையை சுமந்து செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  பாகூர் அருகே சோரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் தொடங்கிய இந்தப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குருவிநத்தம், சோரியாங்குப்பம் கிளை செயலாளர்கள் சாம்பசிவம், வெங்கடாசலம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
  தொடர்ந்து, குருவிநத்தம், சோரியாங்குப்பம் ஆகிய கிராமங்கள் முழுவதும் தாரை தப்பட்டை முழங்க, பெண்களின் ஒப்பாரியுடன் சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. 
  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலர் ராஜாங்கம், கொம்யூன் செயலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். பிரதேச குழு உறுப்பினர்கள் சரவணன், ராமமூர்த்தி, இளவரசி, குணசெல்வி, வளர்மதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai