புதுச்சேரி ரயில் நிலையத்தில் நெகிழிப் புட்டிகளை நசுக்கும் இயந்திரம்

புதுச்சேரி ரயில் நிலைய முதலாவது நடைமேடை நுழைவு வாயிலில் நெகிழிப் புட்டிகளை நசுக்கும் இயந்திரம் புதன்கிழமை நிறுவப்பட்டது. 

புதுச்சேரி ரயில் நிலைய முதலாவது நடைமேடை நுழைவு வாயிலில் நெகிழிப் புட்டிகளை நசுக்கும் இயந்திரம் புதன்
கிழமை நிறுவப்பட்டது. 
 குளிர்சாதன பெட்டி போல் காட்சியளிக்கும் இந்த இயந்திரம், ஒரே நாளில் 5,000 புட்டிகள் வரை நசுக்கும் திறன் கொண்டது.  பயணிகள் தங்களது நெகிழிப் புட்டிகளை இந்த இயந்திரத்தில் வைத்தால், அது தானாக நசுக்கி பொடியாக்கிவிடும். இந்த துகள்களை மறுசூழற்சிக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த இயந்திரம் குறித்து ரயில் பயணிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயணிகள் தங்களிடம் இருந்த காலி தண்ணீர் புட்டிகளை இயந்திரத்தில் போட்டு நசுக்கினர்.
 பயணிகளுடன் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து, "ரயில் நிலையத்தை தூய்மையாக வைத்துக்கொள்வோம்', "நெகிழிப் பொருள்களை தவிர்ப்போம்',  "நெகிழிப் பொருள்களை மறுசுழற்சி செய்ய கைகோப்போம்' என உறுதிமொழி ஏற்றனர்.
 புதிய இயந்திரம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு தேவைக்காக நெகிழிப் புட்டிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.  குறிப்பாக, தண்ணீர் பயன்பாட்டுக்கு நெகிழிப் புட்டிகள் மிக முக்கியமானவையாக மாறிவிட்டன. 
தண்ணீர் புட்டிகளை பயன்படுத்திய பிறகு பொது இடங்களில் வீசி எறிவது மக்களின் இயல்பான ஒன்றாக, நடைமுறையில் உள்ளது. இதனால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு அடையும் என்ற அக்கறை பெரும் பாலானோருக்கு இருப்பதில்லை.
 ஆகவே, இதை மாற்றும் எண்ணத்தில் நெகிழிப் புட்டிகளை நசுக்கும் இயந்திரம் புதுச்சேரி ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது. 
இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விவரம் அந்த இயந்திரத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட புட்டிகளை மட்டும் இயந்திரத்தில் போட வேண்டும். 
அட்டை பெட்டி, கண்ணாடி குவளைகள், துணிகள், தகர டப்பாக்கள் போன்றவற்றை இதில் போடக்கூடாது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com