விதை நெல் மானியத் தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் விதை நெல்லுக்கான மானியத் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை தெரிவித்தது. 

விவசாயிகள் விதை நெல்லுக்கான மானியத் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை தெரிவித்தது. 
இதுகுறித்து கூடுதல் வேளாண் இயக்குநர் (பயிற்சி வழி தொடர்பு திட்டம்) கே. சிவசண்முகம் வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பு:
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, பயிர் உற்பத்தி தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ், புதுவை பகுதியில் நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில், தேவைப்படும் நெல் விதைகளை புதுவை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர் நிறுவனம் (பாப்கோ) மூலம் வழங்கி வந்தது. 
தற்போது, போதிய சான்று விதை கையிருப்பு இல்லாத சூழலில், நெல் சாகுபடிக்கு தேவைப்படும் விதைத் தேவையை கருத்தில் கொண்டு, புதுவை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம், விதை நெல் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு மட்டும் நேரடி நெல் விதைகளை மானிய முறையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறையில், விதைக்கான மானியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாப்கோ மூலம் விதைநெல் கிடைக்கப்பெறாத புதுவை பகுதியைச் சேர்ந்த நடப்பு சம்பா பட்ட பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை மானியத் தொகை கோரும் விண்ணப்பப் படிவத்தை தங்கள் பகுதியில் அமைந்துள்ள உழவர் உதவியகத்தில் வருகிற 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 வரை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அந்தந்த உழவர் உதவியகத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மானியத் தொகையை பெறுவதற்கு விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் அலுவலர்களை அணுகி, அவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைப்படி மானியம் கோரும் விண்ணப்பத்தை சமர்ப்பித்து பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com